ரோமர் பாதை இரட்சிப்பு என்றால் என்ன?


கேள்வி: ரோமர் பாதை இரட்சிப்பு என்றால் என்ன?

பதில்:
ரோமர் பாதை இரட்சிப்பு என்பது ரோமருக்கு எழுதின நிருபத்திலிருந்து வசனங்களை பயன்படுத்தி இரட்சிப்பின் நற்செய்தியை விளக்கும் முறையாகும். இது மிகவும் எளிமையானதும் அதேவேளை நமக்கு ஏன் இரட்சிப்பு தேவையாய் இருக்கிறது, தேவன் நமக்கு அதை எவ்வாறு அளித்திருக்கிறார், நாம் இரட்சிப்பை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் இரட்சிப்பின் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன போன்றவைகளை விளக்கி காண்பிக்கிற மிகவும் சக்திவாய்ந்த ஒரு முறையாகும்.

ரோமர் பாதை இரட்சிப்பில் முதல் வசனம் ரோமர் 3:23, "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்." நாம் எல்லோரும் பாவம் செய்து இருக்கிறோம். நாம் எல்லோரும் தேவனுக்கு பிரியமில்லாத அவரைப் புண்படுத்துகிறதான காரியங்களை செய்திருக்கிறோம். குற்றமற்ற அப்பாவியான மனிதர் என்று யாருமே இல்லை. ரோமர் 3:10-18 வரையிலுள்ள வசனங்கள் பாவம் எப்படி இருக்கிறது என்பதான தெளிவான சித்திரத்தை அளிக்கிறது.

ரோமர் பாதை இரட்சிப்பில் இரண்டாவது வசனம், ரோமர் 6:23, இந்த வசனம் பாவத்தின் விளைவைக் குறித்து போதிக்கிறது - "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." நமது பாவத்தின் நிமித்தமாக நாம் சம்பாதித்த தண்டனை என்னவென்றால் "மரணம்". வெறுமனே சரீர மரணம் அல்ல மாறாக நித்திய மரணம் ஆகும்.

ரோமர் பாதை இரட்சிப்பில் மூன்றாவது வசனம், ரோமர் 6:23ன் இரண்டாம் பகுதி உரைக்கிற காரியத்தில் இருந்து துவங்குகிறது. 'தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்". ரோமர் 5:8 அறிவிக்கிறதாவது, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." இயேசு கிறிஸ்து நமக்காக மரித்தார்! நமது பாவங்களுக்குள்ள விலைக்கிரயத்தை இயேசு தமது மரணத்தின் மூலமாக செலுத்தி முடித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம் நிறுபணமாகிற காரியம் என்னவென்றால், நமது பாவங்களுக்காக உள்ள இயேசுவின் மரத்தை தேவன் அங்கீகரீத்தார் என்பதாகும்.

ரோமர் பாதை இரட்சிப்பில் நான்காவது வசனம் ரோமர் 10:9, "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." இயேசு நம்முடைய ஸ்தானத்தில் நமக்காக மரித்தபடியினால் நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், நம்முடைய பாவத்தின் விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த இயேசுவில் விசுவாசம் வைத்தல் மட்டும்தான் - அப்படி செய்தால் இரட்சிக்கப்படுவோம்! ரோமர் 10:13 கூறுகிறது, "ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." நம்மை நம்முடைய நித்திய மரணத்தில் இருந்து விடுவிக்க, நமது பாவங்களுடைய தண்டணையை இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். அதிநிமித்தம் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து அவரை தங்களுடைய கர்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட யாவருக்கும், அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு மன்னித்து இரட்சிப்பையும் அளிக்கிறார்.

ரோமர் பாதை இரட்சிப்பில் கடைசி நிலை என்னவென்றால், இரட்சிப்பின் பலன்கள். ரோமர் 5:1வது வசனம் இந்த அற்புதமான செய்தியை தன்னகத்தே கொண்டுள்ளது: "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு நமக்குள்ள இந்த சமாதான உறவை நாம் பெறமுடியும். "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" என்று ரோமர் 8:1 போதிக்கிறது. நமக்காக இயேசு நம்முடைய ஸ்தானத்தில் மரித்தபடியினாலே, நம்முடைய பாவங்களுக்காக நாம் ஒரு போதும் தண்டிக்கப்பட மாட்டோம். இறுதியாக ரோமர் 8:38-39 வரையுள்ள வசனங்களில், தேவனிடத்தில் இருந்து இந்த விலையேறப்பெற்ற ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது: "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."

இந்த ரோமர் பாதை இரட்சிப்பை நீங்கள் பின்பற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். உமது உதவியினால், நான் எனது இரட்சிப்பிற்காக எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். உமது பரிசாகிய நித்திய ஜீவனுக்காகவும் நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English
முகப்பு பக்கம்
ரோமர் பாதை இரட்சிப்பு என்றால் என்ன?

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்