settings icon
share icon
கேள்வி

பஞ்சாகமம் என்றால் என்ன?

பதில்


பஞ்சாகமம் என்பது வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களுக்கான பெயர், பழமைவாத வேதாகம அறிஞர்கள் பெரும்பாலும் மோசே எழுதியதாக நம்புகிறார்கள். பஞ்சாகமத்தின் புத்தகங்கள் அவற்றின் எழுத்தாளரை தெளிவாக அடையாளம் காண்பிக்காவிட்டாலும், அவற்றில் மோசேயின் அல்லது அவருடைய வார்த்தைகளாகக் குறிப்பிடும் பல பகுதிகள் உள்ளன (யாத்திராகமம் 17:14; 24:4-7; எண்ணாகமம் 33:1-2; உபாகமம் 31:9-22). பஞ்சாகமத்தின் எழுத்தாளராக மோசே இருப்பதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று, பழைய ஏற்பாட்டின் இந்தப் பகுதியை "மோசேயின் நியாயப்பிரமாணம்" (லூக்கா 24:44) என்று இயேசுவே குறிப்பிடுகிறார். மோசேயைத் தவிர வேறு யாரோ சேர்த்ததாகத் தோன்றுகிற சில வசனங்கள் உள்ளன—உதாரணமாக, உபாகமம் 34:5-8, இது மோசேயின் மரணம் மற்றும் அடக்கம் பற்றி விவரிக்கிறது—பெரும்பாலான அறிஞர்கள் இந்த புத்தகங்களில் பெரும்பகுதியை மோசேக்குக் கூறுகின்றனர். யோசுவா அல்லது வேறு யாராவது உண்மையில் அசல் கையெழுத்துப் பிரதிகளை எழுதியிருந்தாலும், போதனை மற்றும் வெளிப்பாட்டை தேவனிடமிருந்து மோசே மூலம் வந்ததைக் கண்டறிய முடியும், மேலும் யார் உண்மையில் வார்த்தைகளை எழுதினாலும், இறுதியில் வேதாகமத்தின் எழுத்தாளர் தேவனேயாகும், மற்றும் புத்தகங்கள் யாவும் தேவனால் அருளப்பட்டவை.

"பஞ்சாகமம்" என்ற வார்த்தை "ஐந்து" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையான பெண்டா மற்றும் டூக்கோஸ் ஆகியவற்றின் கூட்டுச்சொல்லில் இருந்து வருகிறது, அதைப் "புஸ்தகச்சுருள்" என்றும் மொழிபெயர்க்கலாம். எனவே, "பஞ்சாகமம்" என்பது வெறுமனே யூத கானோனின் மூன்று பிரிவுகளில் முதல் ஐந்து புஸ்தகச்சுருள்களைக் குறிக்கிறது. பெண்டடுக் என்ற பெயர் கிபி 200-ல், தெர்த்துல்லியன் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை குறிப்பிடுவதற்கு இந்த பெயரில் குறிப்பிட்டதில் இருந்து வருகிறது. இந்த புத்தகங்கள் தோரா என்றும் அழைக்கப்படுகிறது, இது "நியாயப்பிரமாணம்" என்று பொருள்படும் எபிரேய வார்த்தை, வேதாகமத்திலுள்ள இந்த ஐந்து புத்தகங்களாவன, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம்.

யூதர்கள் பொதுவாக பழைய ஏற்பாட்டை மூன்று வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர், நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் எழுத்துக்கள். நியாயப்பிரமாணம் அல்லது தோரா சிருஷ்டிப்பின் வரலாற்றுப் பின்னணியையும், ஆபிரகாம் மற்றும் யூத தேசத்தை தேவன் தேர்ந்தெடுத்த மக்களாக தேர்ந்தெடுத்ததையும் கொண்டுள்ளது. தோராவில் சீனாய் மலையில் இஸ்ரவேலுக்கு வழங்கப்பட்ட நியாயப்பிரமாணமும் உள்ளது. வேதம் இந்த ஐந்து புத்தகங்களை பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறது. யோசுவா 1:7 இல், "என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய" என்று கூறப்பட்டுள்ளது, மேலும் அவை 1 ராஜாக்கள் 2:3 இல் "மோசேயின் நியாயப்பிரமாணம்" என்று அழைக்கப்படுகின்றன.

வேதாகமத்தின் ஐந்து புத்தகங்கள் பஞ்சாகமத்தை உருவாக்குகின்றன, மனிதனுக்கு தேவனுடைய முற்போக்கான வெளிப்பாட்டின் ஆரம்பம். ஆதியாகமத்தில், சிருஷ்டிப்பின் ஆரம்பம், மனிதனின் வீழ்ச்சி, மீட்பின் வாக்குத்தத்தம், மனித நாகரிகத்தின் ஆரம்பம் மற்றும் அவர் தேர்ந்தெடுத்த தேசமான இஸ்ரவேலுடன் தேவன் செய்த உடன்படிக்கை உறவின் தொடக்கத்தைக் காண்கிறோம்.

அடுத்த புத்தகம் யாத்திராகமம் ஆகும், இது தேவன் தமது உடன்படிக்கையின் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தேவன் அவர்களுக்காக வைத்திருக்கிற வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுவதற்கான தயாரெடுப்பையும் பதிவு செய்கிறது. ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடி 400 வருட அடிமைத்தனத்திற்குப் பிறகு எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்பட்டதை யாத்திராகமம் பதிவு செய்கிறது (ஆதியாகமம் 15:13). சீனாய் மலையில் தேவன் இஸ்ரவேலர்களுடன் செய்த உடன்படிக்கை, ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுவதற்கான அறிவுறுத்தல்கள், பத்து கட்டளைகளை வழங்குதல் மற்றும் இஸ்ரவேலர்கள் தேவனை எப்படி வழிபட வேண்டும் என்பதற்கான பிற அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை யாத்திராகமம் பதிவு செய்கிறது.

லேவியராகமம் யாத்திராகமத்தைப் பின்பற்றுகிறது மற்றும் ஒரு உடன்படிக்கை மக்கள் (இஸ்ரவேலர்கள்) தேவனை வழிபட்டு தங்களை எவ்வாறு ஆள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது. பாவத்திற்கு முற்றிலும் பரிகாரம் செய்த கிறிஸ்துவின் பரிபூரண பலி வரை தேவன் தனது மக்களின் பாவங்களை கண்டுகொள்ளாமல் இருக்க அனுமதிக்கும் பலிமுறைகளின் தேவைகளை இது வகுக்கிறது.

லேவியராகமத்தைப் பின்தொடர்வது எண்ணாகமம் ஆகும், இது 40 வருடங்களில் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியது மற்றும் தேவனை வணங்குவதற்கும் அவருடைய உடன்படிக்கை மக்களாக வாழ்வதற்கும் வழிமுறைகளை வழங்குகிறது. பஞ்சாகமத்தில் அடங்கிய ஐந்து புத்தகங்களில் கடைசியாக இருப்பது உபாகமம். உபாகமம் சில நேரங்களில் "இரண்டாவது நியாயப்பிரமாணம்" அல்லது "மறுபடியும் உரைக்கப்பட்ட நியாயப்பிரமாணம்" என்று குறிப்பிடப்படுகிறது. இஸ்ரவேல் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு அது மோசேயின் இறுதி வார்த்தைகளை பதிவு செய்கிறது (உபாகமம் 1:1). உபாகமத்தில் சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணம் மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்கள் அவர்களின் வரலாற்றின் புதிய அத்தியாயத்தில் நுழைந்தபோது, தேவனுடைய கட்டளைகளையும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் ஆசீர்வாதங்களையும், கீழ்ப்படியாமையால் வரும் சாபங்களையும் மோசே அவர்களுக்கு நினைவூட்டினார்.

பஞ்சாகமத்தின் ஐந்து புத்தகங்கள் பொதுவாக வரலாற்று புத்தகங்களாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை பெரும்பாலும் தோரா அல்லது நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அவை நியாயப்பிரமாணங்களை விட அதிகமாக உள்ளன. தேவனுடைய மீட்பின் திட்டத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அவை வழங்குகின்றன மற்றும் வேதத்தில் பின்பற்றப்படும் எல்லாவற்றிற்கும் ஒரு பின்னணியை வழங்குகின்றன. பழைய ஏற்பாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, பஞ்சாகமத்தில் அடங்கியுள்ள வாக்குத்தத்தங்கள், மாதிரிகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவின் ஆளுமை மற்றும் கிரியையில் அவற்றின் இறுதி நிறைவேற்றத்தைக் கொண்டுள்ளன.

English



முகப்பு பக்கம்

பஞ்சாகமம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries