settings icon
share icon
கேள்வி

இயேசுவின் சோதனைகளுக்கான பொருள் மற்றும் நோக்கம் என்ன?

பதில்


ஞானஸ்நானத்திற்குப் பிறகு, இயேசு "ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்" (லூக்கா 4:1-2). வனாந்தரத்தில் மூன்று சோதனைகள் இயேசுவின் விசுவாசத்தை சோதிக்கும்படி தேவனிடமிருந்து சாத்தான் மூலம் வந்தது. மத்தேயு 16:21-23 இல் இதே போன்ற ஒரு சோதனையை நாம் பார்க்கிறோம், அங்கு சாத்தான், பேதுரு மூலம், இயேசுவை அவருக்கு விதிக்கப்பட்ட சிலுவையை விட்டுவிடும்படி தூண்டுகிறான். லூக்கா 4:13 வனாந்தரத்தில் சோதனைகளுக்குப் பிறகு, "பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்", இது இயேசு மேலும் சாத்தானால் சோதிக்கப்பட்டார் என்பதைக் குறிக்கிறது, இருப்பினும் மேலும் அவர் சோதிக்கப்பட்ட சம்பவங்கள் நற்செய்தி நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், பல்வேறு சோதனைகள் இருந்தபோதிலும், அவர் பாவம் இல்லாதவராய் இருந்தார்.

இயேசுவை வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட அனுமதிப்பதில் தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது என்பது "ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு" என்ற கூற்றிலிருந்து தெளிவாகிறது. ஒரு நோக்கம் என்னவென்றால், நம்முடைய எல்லா பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளிலும் (எபிரேயர் 4:15) நம்முடன் பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்று உறுதியளிப்பதாகும், ஏனென்றால் நாம் சோதிக்கப்படுவதைப் போலவே அவரும் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார். நம்முடைய ஆண்டவரின் மனித இயல்பு, நம்முடைய சொந்த பலவீனங்களில் பரிதபிக்கத்தக்கதாக அவருக்கு உதவுகிறது, ஏனென்றால் அவர் பலவீனத்திற்கும் ஆளானார். "ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்" (எபிரேயர் 2:18). இங்கே "சோதிக்கப்பட்டு" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை "சோதனைக்கு உட்படுத்தப்பட்டு" என்று பொருள். எனவே, நாம் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சோதிக்கப்படும்போது, இயேசு அதே சோதனைகளுக்கு உட்பட்டவராக இருக்கிறபடியினால் புரிந்துகொண்டு நமக்காக பரிதபிக்கக்கூடியவராய் இருக்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

இயேசுவின் சோதனைகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான நிலையில் உள்ள மூன்று மாதிரிகளைப் பின்பற்றுகின்றன. முதல் சோதனையானது மாம்சத்தின் இச்சையைப் பற்றியது (மத்தேயு 4:3-4), இதில் அனைத்து விதமான சரீர ஆசைகளும் அடங்கும். நம் ஆண்டவர் பசியுடன் இருந்தார், பிசாசு அவரிடம் கற்களை அப்பமாக மாற்றும்படிக்குத் தூண்டினான், ஆனால் அவர் உபாகமம் 8:3-ஐ மேற்கோள் காட்டி பதிலளித்தார். இரண்டாவது சோதனையானது ஜீவனத்தின் பெருமையைப் பற்றியது (மத்தேயு 4:5-7), இங்கு பிசாசு அவருக்கு எதிராக ஒரு வேதப் பகுதியைப் பயன்படுத்த முயன்றான் (சங்கீதம் 91:11-12), ஆனால் ஆண்டவர் அதற்கு மாறாக வேதவாக்கியத்துடன் பதிலளித்தார் (உபாகமம் 6:16), மேலும் அவர் தனது சொந்த அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது சோதனையானது கண்களின் இச்சையைப் பற்றியது (மத்தேயு 4:8-10), மற்றும் அவர் முதலில் வந்த நோக்கம் மற்றும் சிலுவையில் அறையப்படுவதைத் தவிர்த்து மேசியாவின் விரைவான வழியை அடைய முடியுமானால், இதுதான் வழி. பிசாசுக்கு ஏற்கனவே உலகின் ராஜ்யங்களின் மீது கட்டுப்பாடு இருந்தது (எபேசியர் 2:2), ஆனால் கிறிஸ்துவின் விசுவாசத்திற்கு ஈடாக எல்லாவற்றையும் கொடுக்க அவன் தயாராக இருந்தான். வெறும் எண்ணமே கர்த்தருடைய தெய்வீக இயல்பை நடுங்கச் செய்கிறது, மேலும் அவர் புத்திக் கூர்மையாக பதிலளித்தார், "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார் (மத்தேயு 4:10; உபாகமம் 6:13).

நம் மாம்சம் இயற்கையாகவே பலவீனமாக இருப்பதால் நாம் பல சோதனைகளில் விழுகிறோம், ஆனால் நம்மால் தாங்க முடியாத அளவிற்கு நம்மை சோதிக்கப்பட விடாதபடிக்கு தேவன் இருக்கிறார்; அதிலிருந்து தப்பிக்கும்படி அவர் ஒரு வழியையும் வழங்குகிறார் (1 கொரிந்தியர் 10:13). ஆகையால் நாம் சோதனையை ஜெயிக்க முடியும் மற்றும் சோதனையிலிருந்து விடுபட்டதற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். வனாந்தரத்தில் இயேசுவின் அனுபவம் தேவனுக்கு திறம்பட சேவை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் இந்த பொதுவான சோதனைகளைப் பார்க்க உதவுகிறது.

மேலும், சோதனைகளுக்கு இயேசுவின் பதிலில் இருந்து நாமும் எவ்வாறு சரியாக பதிலளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம், அதாவது வேதத்திலிருந்து பதில் அளிக்கவேண்டும். தீய சக்திகள் எண்ணற்ற சோதனைகளுடன் நம்மிடம் வருகின்றன, ஆனால் அனைத்திற்கும் ஒன்றுபோலவே மூன்று விஷயங்கள் உள்ளன: மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை (1 யோவான் 2:16). நம் இருதயங்களையும் மனதையும் சத்தியத்தினாலே நிறைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த சோதனைகளை நாம் அடையாளம் கண்டு எதிர்த்துப் போராட முடியும். ஆவிக்குரிய யுத்தத்தில் ஒரு கிறிஸ்தவ போர்ச்சேவகனின் சர்வாயுத வர்க்கம் ஒரே ஒரு தாக்கும் ஆயுதத்தை உள்ளடக்கியது, அது தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயம் ஆகும் (எபேசியர் 6:17). வேதாகமத்தை நெருக்கமாக அறிவது பட்டயத்தை நம் கைகளில் வைக்கவும் மற்றும் சோதனைகளில் வெற்றிபெறவும் நமக்கு உதவும்.

English



முகப்பு பக்கம்

இயேசுவின் சோதனைகளுக்கான பொருள் மற்றும் நோக்கம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries