இயேசு ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?


கேள்வி: இயேசு ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?

பதில்:
இயேசு தம் சோதனைகள், சித்திரவதைகள், மற்றும் சிலுவை மரணம் ஆகியவற்றால் கடுமையான துன்பங்களை அனுபவித்தார் (மத்தேயு 27, மாற்கு 15, லூக்கா 23, யோவான் 19). அவருடைய துன்பம் உடல் ரீதியானது: ஏசாயா 52:14 இவ்வாறு கூறுகிறது, "மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்." அவருடைய துன்பம் உணர்ச்சிப்பூர்வமானது: “அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56). அவருடைய துன்பம் ஆவிக்குரியதாக இருந்தது: “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21). முழு உலகத்தினுடைய பாவங்களின் எடை இயேசுவின்மேல் இருந்தது (1 யோவான் 2:2). "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று பாவம் அவரைக் கதரும்படியாகச் செய்தது (மத்தேயு 27:46). இயேசுவின் இந்த கொடூரமான உடல் ரீதியான துன்பம் நம் பாவங்களின் குற்றத்தைச் சுமந்துகொண்டு, நம்முடைய தண்டனையைச் செலுத்துவதற்காக ஜீவனையே கொடுப்பதற்காக இருந்தது (ரோமர் 5:8).

ஏசாயா இயேசுவின் துன்பத்தை முன்னறிவித்தார்: “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:3, 5). இந்த வேதப்பகுதி இயேசுவின் துன்பங்களுக்கான காரணம் என்னவென்பதை தெரிவிக்கிறது: "நம்முடைய மீறுதல்களினிமித்தம்” நம்மை சுகமாக்க, நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணுவதற்கு இயேசு பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தார்.

இயேசு தம் சீஷர்களிடம், அவரடைப்போகும் துன்பங்கள் மெய்யானவைகள் என்று கூறினார்: “மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்” (லூக்கா 9:22; 17:25). வார்த்தை “வேண்டும்”- அவர் துன்பப்பட வேண்டும், அவர் கொல்லப்பட வேண்டும். கிறிஸ்துவின் துன்பம் உலகின் இரட்சிப்பிற்கான தேவனுடைய திட்டம் ஆகும்.

சங்கீதம் 22: 14-18 வரையிலுள்ள வசனங்களில் மேசியாவின் துன்பங்களில் சில விவரிக்கப்பட்டுள்ளது: “தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.” இவற்றிற்காகவும் பிற தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலுக்காகவும் இயேசு பாடுகள்பட்டு கஷ்டப்பட வேண்டியிருந்தது.

இயேசு ஏன் மிகவும் மோசமாக பாடுகளைப் படுகிறார்? குற்றமுற்றவர்களுக்காக குற்றமற்றவர் மரிக்கின்ற நியமம் ஏதேன் தோட்டத்தில் நிறுவப்பட்டது: ஆதாம் மற்றும் ஏவாள் தங்கள் அவமானத்தை மறைக்க விலங்குத் தோல் உடைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 3:21) -அப்படியாக ஏதேனில் இரத்தம் சிந்தப்பட்டது. பின்னர், இந்த நியமம் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் அமைக்கப்பட்டிருந்தது: “ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவியராகமம் 17:11; எபிரேயர் 9:22). பலியின் ஒரு பாகமாக இயேசு பாடுபட்டு துன்பப்பட வேண்டியிருந்தது, காரணம் இயேசு "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29). இயேசுவின் உடல் அனுபவித்த சித்திரவதைகள் நம்முடைய பாவங்களுக்குத் தேவையான பரிகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன. நாம் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” மீட்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:19).

சிலுவையில் இயேசு அனுபவித்த துன்பம் பாவத்தின்மேல் தேவனுக்கு இருந்த கோபம், மனிதகுலத்தின் கொடூரம், சாத்தானின் வெறுப்பு ஆகியவற்றைக் காண்பிக்கிறது. கல்வாரியில், மனிதகுலத்தின் மீட்பராக வந்த மனுஷகுமாரனுக்கு மனிதகுலத்தினால் மிகவும் மோசமானதை செய்ய அனுமதிக்கப்பட்டார். சாத்தான் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததாக நினைத்திருக்கலாம், ஆனால் தேவனுடைய குமாரன் சாத்தானையும் பாவத்தையும் மற்றும் மரணத்தையும் வெற்றிகொண்டார். "இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்" (யோவான் 12:31; கொலோ 2:15).

விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசு துன்பப்பட்டு மரணமடைந்தார். இயேசு கைதுசெய்யப்பட்ட இரவில், கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்கையில், அவரது எல்லா செயலையும் அர்ப்பணித்து ஜெபித்தார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினார் (லூக்கா 22:42). கிறிஸ்துவின் பாடுகளினால் கஷ்டப்படுகிற பாத்திரம் அவரை விட்டு எடுக்கப்படவில்லை; அவர் நம் அனைவருக்காகவும் குடித்தார். நாம் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழி இல்லை.

English


முகப்பு பக்கம்
இயேசு ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?