settings icon
share icon
கேள்வி

இயேசு தாவீதின் குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


புதிய ஏற்பாட்டில் பதினேழு வசனங்கள் இயேசுவை "தாவீதின் குமாரன்" என்று விவரிக்கின்றன. ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது, தாவீது ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்க இயேசு எப்படி தாவீதின் குமாரனாக இருப்பார்? பதில் என்னவென்றால், கிறிஸ்து (மேசியா) தாவீதின் வித்து என்கிறதான தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இயேசு இருந்தார் (2 சாமுவேல் 7:12-16). இயேசு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மேசியா, அதாவது அவர் தாவீதினுடைய சந்ததி ஆவார். மத்தேயு 1-ல் இயேசு சட்டப்பூர்வ தந்தையாகிய யோசேப்பு மூலம் தாவீதின் நேரடி வம்சாவளியில் உள்ளவராக இருந்தார். லூக்கா 3-வது அதிகாரத்தில் உள்ள வம்சாவளியானது இயேசுவின் பரம்பரையை அவரது தாயார் மரியாள் மூலம் வருகிறதை வழங்குகிறது. இயேசு தாவீதின் வழித்தோன்றல், யோசேப்பு மூலம் புத்திர சுவிகாரமாகவும் மற்றும் மரியாள் மூலம் இரத்த சம்பந்தமாகவும் ஆனார். முதன்மையாக, கிறிஸ்துவை தாவீதின் குமாரன் என்று குறிப்பிடும்போது, பழைய ஏற்பாடு அவரைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறியது போல் அவரது மேசியாவின் தலைப்பைக் குறிப்பிடுவதாக இருந்தது.

இயேசுவை "ஆண்டவரே, தாவீதின் குமாரனே" என்று பலமுறை, விசுவாசத்தினால், இரக்கம் வேண்டி அல்லது குணப்படுத்துதலைத் தேடும் மக்களால் அழைக்கப்பட்டது. பிசாசினால் அவரது மகள் துன்புறுத்தப்பட்ட ஒரு பெண் (மத்தேயு 15:22), வழியருகே இரண்டு குருடர்கள் (மத்தேயு 20:30), மற்றும் பர்திமேயு என்கிற ஒரு குருடன் (மார்க் 10:47) ஆகியோர் தாவீதின் குமாரனே என்று உதவிக்காக கூப்பிட்டனர். அவர்கள் அவருக்கு அளித்த மரியாதைக்குரிய தலைப்புகள் அவர் மீதான நம்பிக்கையை அறிவித்தன. அவரை "கர்த்தர்" என்று அழைப்பது அவரது தெய்வீகம், ஆதிக்கம் மற்றும் வல்லமை பற்றிய உணர்வை வெளிப்படுத்தியது, மேலும் அவரை "தாவீதின் குமாரன்" என்று அழைப்பதன் மூலம், அவர்கள் அவரை மேசியா என்று அறிவித்தனர்.

பரிசேயர்களும், மக்கள் இயேசுவை "தாவீதின் குமாரன்" என்று அழைத்ததின் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் விசுவாசத்தில் கூக்குரலிட்டவர்களைப் போலல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த பெருமை மற்றும் வேதத்தைப் பற்றிய புரிதல் இல்லாததால் குருடர்களாக இருந்தனர், பார்வையற்ற பிச்சைக்காரர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை - இங்கே அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்த மேசியா வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் இயேசுவை வெறுத்தனர், ஏனென்றால் அவர்கள் தகுதியானவர் என்று அவர்கள் நினைத்த மரியாதையை அவர் கொடுக்க மாட்டார் என்று அறிந்திருந்தார்கள். எனவே, இயேசுவை இரட்சகராக மக்கள் போற்றுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் கோபமடைந்தனர் (மத்தேயு 21:15) மற்றும் அவரை கொலை செய்ய சதி செய்தனர் (லூக் 19:47).

இயேசு இந்த தலைப்பின் அர்த்தத்தை விளக்கும்படி வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் கேட்டு மேலும் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். தாவீது தன்னை "என் ஆண்டவர்" (மாற்கு 12:35-37) என்று குறிப்பிடும் போது மேசியா தாவீதின் குமாரன் என்பது எப்படி? நிச்சயமாக, நியாயப்பிரமாண ஆசிரியர்களால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. இயேசு அதன் மூலம் யூதத் தலைவர்கள் ஆசிரியர்களாக இருப்பதையும், பழைய ஏற்பாட்டில் மேசியாவின் உண்மைத் தன்மையைப் பற்றி போதித்ததைப் பற்றிய அவர்களின் அறியாமையையும் வெளிப்படுத்தினார், மேலும் அவர்களை அவரிடமிருந்து அந்நியப்படுத்தினார்.

தேவனுடைய ஒரே குமாரன் மற்றும் உலகத்திற்கான இரட்சிப்பின் ஒரே வழி இயேசு கிறிஸ்துவே (அப். 4:12), அவர் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் தாவீதின் குமாரன்.

English



முகப்பு பக்கம்

இயேசு தாவீதின் குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries