கேள்வி
இயேசு எப்போதாவது கோபமாக இருந்தாரா?
பதில்
காசுக்காரர் மற்றும் மிருகங்களை விற்கிறவர்களை தேவாலயத்தை விட்டு புறம்பே துரத்திவிட்டு இயேசு சுத்தம் செய்தபோது, அவர் மிகுந்த உணர்ச்சியையும் கோபத்தையும் காட்டினார் (மத்தேயு 21:12-13; மாற்கு 11:15-18; யோவான் 2:13-22). இயேசுவின் உணர்ச்சி தேவனுடைய வீட்டின்பேரில் உண்டாயிருந்த "வைராக்கியம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது (யோவான் 2:17). அவருடைய கோபம் பரிசுத்தமானது மற்றும் முற்றிலும் நியாயமானது, ஏனெனில் அதன் மூலக்காரணம் தேவனுடைய பரிசுத்தம் மற்றும் ஆராதனை பற்றிய அக்கறையே ஆகும். இவை அசுத்தப்படுத்தப்பட்டு இடர்நிலையில் இருந்ததால், இயேசு விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தார். இயேசு கப்பர்நகூமின் ஜெப ஆலயத்தில் இன்னொரு முறை கோபத்தைக் காட்டினார். பரிசேயர்கள் இயேசுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தபோது, "அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து" என்று வாசிக்கிறோம் (மாற்கு 3:5).
பல சமயங்களில், நாம் கோபத்தை ஒரு சுயநலமான, அழிவுகரமான உணர்ச்சியாக நினைக்கிறோம், அதை நம் வாழ்வில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். இருப்பினும், இயேசுவே சில சமயங்களில் கோபமடைந்தார் என்பது கோபம் ஒரு உணர்ச்சியாக, ஒழுக்கம் மற்றும் ஒழுக்கம் இன்மை ஆகிய இரண்டையும் சாராத ஒன்று என்பதைக் குறிக்கிறது. இது புதிய ஏற்பாட்டில் வேறு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எபேசியர் 4:26 "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்று அறிவுறுத்துகிறது. இங்கே கட்டளை என்னவென்றால் "கோபத்தைத் தவிர்ப்பது" (அல்லது அதை அடக்கவேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும்) அல்ல, ஆனால் அதை முறையாக, சரியான நேரத்தில் கையாள வேண்டும் என்பதாகும். இயேசுவின் கோபத்தின் வெளிப்பாடுகள் பற்றிய பின்வரும் உண்மைகள் கவனிக்கப்பட வேண்டும்:
1) அவரது கோபத்திற்கு சரியான செயல் நோக்கம் இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் சரியான காரணங்களுக்காக கோபமடைந்தார். இயேசுவின் கோபம் அவருக்கு எதிரான சிறு சிறு வாதங்களிலிருந்தோ அல்லது தனிப்பட்ட அவமானங்களினாலோ எழவில்லை. இதில் எந்தவித சுயநலமும் இல்லை.
2) அவரது கோபத்திற்கு சரியான கவனம் இருந்தது. அவர் தேவன் அல்லது மற்றவர்களின் "பலவீனங்கள்" மீது கோபப்படவில்லை. அவரது கோபம் பாவமான நடத்தை மற்றும் மெய்யான அநீதியைக் குறிவைத்தே இருந்தது.
3) அவரது கோபத்திற்கு சரியான அனுபந்தம் இருந்தது. மாற்கு 3:5 அவரது கோபத்தில் பரிசேயர்களின் நம்பிக்கை இல்லாமைக்கு எதிராக உள்ள அதீத மன வருத்தமாக இருந்தது என்று கூறுகிறது. இயேசுவின் கோபம் பரிசேயர்கள் மீதான அன்பு மற்றும் அவர்களின் ஆவிக்குரிய நிலை குறித்த அக்கறை ஆகியவற்றிலிருந்து தோன்றியது என்பது தெளிவாகிறது. இங்கே இயேசுவின் கோபத்தில், வெறுப்புக்கும் தவறான விருப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
4) அவரது கோபத்திற்கு சரியான கட்டுப்பாடு இருந்தது. இயேசு தனது கோபத்தில் கூட தனது கட்டுப்பாட்டை மீறவில்லை அல்லது இழக்கவில்லை. அவர் தேவாலயத்தை சுத்தப்படுத்துவதை தேவாலயத் தலைவர்கள் விரும்பவில்லை (லூக்கா 19:47), ஆனால் அவர் பாவம் எதுவும் செய்யவில்லை. அவர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினார்; அவரது உணர்ச்சிகள் அவரை கட்டுப்படுத்தவில்லை.
5) அவரது கோபத்திற்கு சரியான குறிப்பிட்ட காலம் இருந்தது. அவர் தனது கோபத்தை கசப்பானதாக மாற்ற அனுமதிக்கவில்லை; அவர் வெறுப்புணர்வை வைத்திருக்கவில்லை. அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் சரியாகக் கையாண்டார், அவர் கோபத்தை நல்ல நேரத்தில் கையாண்டார்.
6) அவரது கோபத்திற்கு சரியான விளைவு இருந்தது. இயேசுவின் கோபம் தெய்வீக நடவடிக்கையின் தவிர்க்க முடியாத விளைவைக் கொண்டிருந்தது. இயேசுவின் கோபம், அவருடைய எல்லா உணர்ச்சிகளையும் போலவே, தேவனுடைய வார்த்தையால் கட்டுப்படுத்தப்பட்டது; இவ்வாறாக, இயேசுவின் பதில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியது.
நாம் கோபம் கொள்ளும்போது, அடிக்கடி நமக்கு தவறான கட்டுப்பாடு அல்லது தவறான கவனம் இருக்கும். மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரியங்களில் நாம் தோல்வியடைகிறோம். இது மனிதனின் கோபம், "நாம் யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே" (யாக்கோபு 1:19-20). இயேசு மனிதனின் கோபத்தை வெளிப்படுத்தவில்லை, மாறாக தேவனுடைய சரியான மற்றும் நியாயமான கோபத்தையே வெளிப்படுத்தினார்.
English
இயேசு எப்போதாவது கோபமாக இருந்தாரா?