settings icon
share icon
கேள்வி

இயேசு நம்முடைய பிரதான ஆசாரியர் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


இயேசுவிற்குப் பயன்படுத்தப்படும் பல தலைப்புகளில் ஒரு தலைப்புத்தான் பிரதான ஆசாரியர்: மேசியா, இரட்சகர், தேவனுடைய குமாரன், மனுஷகுமாரன், பாவிகளின் சிநேகிதன், முதலியன. ஒவ்வொரு தலைப்பும் அவர் யார், நமக்கு என்ன அர்த்தம் போன்ற ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன. எபிரேயர் புத்தகத்தில், இயேசு ஒரு பிரதான ஆசாரியர் என்று அழைக்கப்படுகிறார் (எபிரேயர் 2:17; 4:14). "ஆசாரியன்" என்ற வார்த்தை இரண்டு முக்கிய அர்த்தங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, மதப்பிரகார சேவைகளில் மத்தியஸ்தம் செய்பவர் என்று அர்த்தம் உடையதாக இருக்கிறது. இரண்டாவதாக, அந்த சேவைகளைச் செய்ய பரிசுத்தமானவர் அல்லது வேறுபிரிக்கப்பட்டவர் என்று பொருள்.

வேதாகமத்தில் முதன் முதலில் இந்த வார்த்தையை ஆதியாகமம் 14-ஆம் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம். தேவனுடைய சிநேகிதனான ஆபிரகாம், ஏலாமின் சேனையால் கைப்பற்றப்பட்ட அவரது சகோதரனின் மகன் லோத்தை மீட்க போரில் இறங்கினார். திரும்பியதும், ஆபிரகாமை சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்த மெல்கிசேதேக்கு சந்தித்தார். "நீதியின் ராஜா" என்று பொருள்படும் பெயரையுடைய இந்த மனிதர், ஆபிரகாமையும், ஆபிரகாமுக்கு வெற்றியை அளித்த உன்னதமான தேவனையும் வாழ்த்தி ஆசீர்வதித்தார். இந்த ஆசீர்வாதத்திற்கு ஈடாக, ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு யுத்தத்தில் உண்டாயிருந்த அனைத்து கொள்ளை பொருட்களிலும் தசமபாகம் (10 சதவீதம்) கொடுத்தார். இந்தச் செயலின் மூலம், ஆபிரகாம் தேவனுடைய ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கின் உயர்ந்த நிலையை ஒப்புக் கொண்டார்.

பல வருடங்களுக்குப் பிறகு, ஆபிரகாமின் பேரன் லேவி ஆசாரிய கோத்திரத்தின் தந்தை என்று தேவனால் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்ப்படுத்தப்பட்டார். சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது, லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியர்களாக அடையாளம் காணப்பட்டனர், ஆரோனின் குடும்பம் ஆசாரியர்களாக மாறியது. நியாயப்பிரமாணத்திற்குத் தேவையான பல பலிகளைச் செலுத்துவதன் மூலம் மக்களுக்காக தேவனிடம் பரிந்து பேசுவதற்கு ஆசாரியர்கள் பொறுப்பேற்றனர். ஆசாரியர்களில், ஒருவர் பிரதான ஆசாரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் வருடத்திற்கு ஒரு முறை பாவநிவாரண நாளில் இரத்தத்தின் உடன்படிக்கைப் பெட்டியில் வைப்பதற்காக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்தார் (எபிரேயர் 9:7). இந்த தினசரி மற்றும் வருடாந்திர பலிகளால், மேசியாவின் பாவங்களைப் போக்க வரும் வருகை வரையிலும் மக்களின் பாவங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இயேசுவை நம்முடைய பிரதான ஆசாரியன் என்று அழைக்கும்போது, அது இந்த முந்தைய இரண்டு ஆசாரியத்துவங்களைக் குறிக்கிறது. அதாவது மெல்கிசேதேக்கைப் போலவே, சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் அவர் ஒரு பிரதான ஆசாரியராக நியமிக்கப்பட்டார் (எபிரெயர் 5:6). லேவிய கோத்திரத்துப் ஆசாரியர்களைப் போலவே, இயேசுவும் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தியப்போது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு பலியைச் செலுத்தினார் (எபிரேயர் 7:26-27). தொடர்ந்து ஆண்டுதோறும் பலி செலுத்தும் லேவிய ஆசாரியர்கள் போலல்லாமல், இயேசு தனது பலியை ஒரே முறை மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது, அவர் மூலமாக தேவனிடம் வரும் அனைவருக்கும் நித்திய மீட்பைப் பெறும்படிச்செய்தார் (எபிரேயர் 9:12).

இயேசுவின் ஆசாரியத்துவத்தைப் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆசாரியரும் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்டவர்கள். இயேசுவோ, நித்தியத்திலிருந்து வந்த தேவனாக இருக்கிறார் என்றாலும், மரணத்தை அனுபவிப்பதற்காகவும், நம்முடைய பிரதான ஆசாரியராக திகழுவதற்காகவும் ஒரு மனிதரானார் (எபிரேயர் 2:9). ஒரு மனிதனாக, அவர் நம்முடைய எல்லா பலவீனங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்பட்டவர், அதனால் அவர் நம்முடைய போராட்டங்களில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள முடியும் நமக்கு உதவிட முடியும் (எபிரேயர் 4:15). இயேசுவானவர் வேறு எந்த ஆசாரியர்களையும் விட பெரியவர், எனவே தான் அவர் எபிரேயர் 4:14 இல் நம்முடைய "மகா பிரதான ஆசாரியர்" என்று அழைக்கப்படுகிறார், மேலும் இது "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரேயர் 4:16) என்கிறதான தைரியத்தை நமக்குக் கொடுக்கிறது.

English



முகப்பு பக்கம்

இயேசு நம்முடைய பிரதான ஆசாரியர் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries