settings icon
share icon
கேள்வி

JEDP கோட்பாடு என்றால் என்ன?

பதில்


சுருக்கமாக, JEDP கோட்பாடு என்பது வேதாகமத்திலுள்ள முதல் ஐந்து புத்தகங்கள், அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்கள் மற்றும் உபாகமம் ஆகியவை கி.மு. 1400-களில் இறந்துபோன மோசேயினால் எழுதப்படவில்லை, மாறாக மோசேக்குப் பிறகு வெவ்வேறு ஆசிரியர்கள் / தொகுப்பாளர்களால் எழுதப்பட்டது என்பதாகும். தேவனுக்குள்ள வெவ்வேறு பெயர்கள் அடிப்படையில் அவைகள் பஞ்சாகமத்தின் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், மொழியியல் பாணியில் கண்டறியக்கூடிய வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த கோட்பாடு. JEDP கோட்பாட்டின் இந்த நான்கு (JEDP) எழுத்துகளும் நான்கு வெவ்வேறு எழுத்தாளர்களைக் குறிக்கின்றன: தேவனுடைய பெயருக்காக யெகோவாவைப் பயன்படுத்தும் எழுத்தாளர், தேவனுடைய பெயருக்காக ஏலோஹிமைப் பயன்படுத்தும் ஆசிரியர், உபாகமத்தின் ஆசிரியர் மற்றும் லேவியராகமத்தின் ஆசிரியராக ஆசாரியன் ஆகியோர் அடங்கும். பஞ்சாகமத்தில் வெவ்வேறு பகுதிகள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம், அதுவும் ஒருவேளை எஸ்றாவால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் என்று JEDP கோட்பாடு கூறுகிறது.

எனவே, ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஐந்து புத்தகங்களில் தேவனுக்கு வெவ்வேறு பெயர்கள் ஏன் உள்ளன? உதாரணமாக, ஆதியாகமம் 1 ஆம் அத்தியாயம் எலோஹிம் என்ற பெயரைப் பயன்படுத்துகிறது, ஆதியாகமம் 2 ஆம் அத்தியாயம் யாவே (YHWH) என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. பஞ்சாகமத்தில் இது போன்ற முறை அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கான பதில் எளிது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்ல மோசே தேவனின் இந்த பெயர்களைப் பயன்படுத்தினார். ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்தில், ஏலோஹிம் - வல்லமையுள்ள சிருஷ்டிகர் என்கிற தேவனுடைய பெயரைப் பயன்படுத்துகிறார். ஆதியாகமம் 2-ஆம் அதிகாரத்தில், யெகோவா - மனிதகுலத்தை உருவாக்கி தொடர்புபடுத்திய தனிப்பட்ட தேவனுடைய பெயரைப் பயன்படுத்துகிறார். இது வெவ்வேறு எழுத்தாளர்களை சுட்டிக்காட்டுவதில்லை, ஆனால் ஒரு எழுத்தாளருக்கு தேவனுடைய பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பை வலியுறுத்துவதற்கும் அவருடைய குணத்தின் வெவ்வேறு அம்சங்களை விவரிப்பதற்கும் உரிய பாணியில் எழுதப்பட்டுள்ளது.

வெவ்வேறு பாணிகளைப் பொறுத்தவரை, ஒரு எழுத்தாளர் வரலாற்றை (ஆதியாகமம்) எழுதும் போது, சட்ட விதிகளை எழுதுகையில் (யாத்திராகமம், உபாகமம்), மற்றும் பலிமுறையின் அமைப்பிலுள்ள (லேவியாராகமம்) சிக்கலான விவரங்களை எழுதும் போது அவர் ஒரு வித்தியாசமான பாணியைக் கொண்டிருப்பார் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமா? ஆக, JEDP கோட்பாடானது பஞ்சாகமத்தில் எளிதில் விளக்கக்கூடிய வேறுபாடுகளை எடுத்துக்கொண்டு, யதார்த்தத்திலோ வரலாற்றிலோ எந்த அடிப்படையும் இல்லாத ஒரு விரிவான கோட்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறது. J, E, D, அல்லது P ஆவணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்தவொரு பண்டைய யூத அல்லது கிறிஸ்தவ அறிஞரும் அத்தகைய ஆவணங்கள் இருந்ததைக் கூட சுட்டிக்காட்டவில்லை.

JEDP கோட்பாட்டிற்கு எதிரான மிக சக்திவாய்ந்த வாதம் வேதாகமம்தான். இயேசு, மாற்கு 12:26-ல், “மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக் குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார். ஆகவே, யாத்திராகமம் 3:1-3-ல் எரியும் முட்புதரைப் பற்றிய நிகழ்வை மோசேதான் எழுதியதாக இயேசு தெளிவாகக் கூறுகிறார். லூக்கா, அப்போஸ்தலர் 3:22-ல், உபாகமம் 18:15-ல் உள்ள ஒரு பத்தியைப் பற்றி கருத்துரைக்கிறார், மேலும் அந்த பத்தியின் ஆசிரியர் மோசே என்றும் கூறுகிறார். பவுல், ரோமர் 10:5-ல், லேவியராகமம் 18:5-ல் மோசே விவரிக்கும் நீதியைப் பற்றி பேசுகிறார். ஆகையால், மோசே லேவியராகமத்தின் ஆசிரியர் என்று பவுல் சாட்சியமளிக்கிறார். ஆகவே, மோசே யாத்திராகமத்தை எழுதியவர் என்பதை ஆண்டவராகிய இயேசுவும், லூக்கா (அப்போஸ்தலர்) மோசே உபாகமம் எழுதியதையும், மோசே லேவியராகமத்தின் ஆசிரியர் என்று பவுல் சொன்னதையும் தெளிவாகக் காண்கிறோம். JEDP கோட்பாடு உண்மையாக இருக்குமானால், இயேசு, லூக்கா மற்றும் பவுல் அனைவரும் பொய்யர்களாக இருக்கவேண்டும் அல்லது அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்வதில் தவறாக இருக்க வேண்டும். கேலிக்குரிய மற்றும் ஆதாரமற்ற JEDP கோட்பாட்டைக் காட்டிலும் இயேசு மீதும், வேதத்தின் மற்ற மனித ஆசிரியர்களிடமும் நம்பிக்கை வைப்போம் (2 தீமோத்தேயு 3:16-17).

English



முகப்பு பக்கம்

JEDP கோட்பாடு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries