settings icon
share icon
கேள்வி

இயேசு 'நான் இருக்கிறேன்' என்று சொன்னபோது என்ன அர்த்தம் கொண்டார்?

பதில்


இயேசு, "நீர் யார் என்று நினைக்கிறீர்?" என்கிற பரிசேயர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறினார், "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.” இயேசுவின் "நான் இருக்கிறேன்" அறிக்கைக்கு யூதர்களின் ஆவேசம் மற்றும் வன்முறையான மாறுத்திரம், அவர் எதை அறிவிக்கிறார் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டிருப்பதைக் குறிக்கிறது அதாவது அவர் யாத்திராகமம் 3:14 இல் தேவன் தம்மைக்குறித்து கொடுத்த "நான் இருக்கிறேன்" என்னும் கூற்றுடன் இயேசு தன்னை சமப்படுத்திக் கொண்டார்.

இயேசு ஆபிரகாமின் காலத்திற்கு முன்பே இருந்தார் என்பதை சொல்ல விரும்பியிருந்தால், அவர் "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே, நான் இருந்தேன்" என்று கூறியிருந்திருப்பார். ஆபிரகாமின் விஷயத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தைகள் மற்றும் இயேசுவின் விஷயத்தில் மொழிபெயர்க்கப்பட்ட "நான் இருக்கிறேன்" ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை ஆகும். ஆவியானவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் ஆபிரகாம் "உருவாக்கப்பட்டவன்" என்பதை தெளிவுபடுத்துகின்றன, ஆனால் இயேசு நித்தியமானவராகவே இருந்தார் மற்றும் இருக்கிறார் (யோவான் 1:1). யூதர்கள் அவர் சொல்வதை புரிந்துகொண்டார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் தேவனுடன் சமமாக இருப்பதாக அவர் கூரினபடியினால் அவரைக் கொல்ல அவர்கள் கற்களை எடுத்தனர் (யோவான் 5:18). அத்தகைய அறிக்கையானது, உண்மையானதாக இல்லாவிட்டால், அது தேவதூஷணம் ஆகும், மற்றும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அதற்குப் பரிந்துரைக்கப்பட்ட தண்டனை மரணம் ஆகும் (லேவியராகமம் 24:11-14). ஆனால் இயேசு எந்த தேவதூஷணமும் சொல்லவில்லை; காரணம் அவர் தேவனாக இருந்தார், தேவனின் ஆள்தத்துவத்தின் இரண்டாவது நபர் ஆவார், எல்லா வகையிலும் பிதாவுக்கு நிகரானவர் ஆவார்.

இயேசு தன்னைப் பற்றிய ஏழு “நான் இருக்கிறேன்” கூற்றுகளில் "நான் இருக்கிறேன்" என்கிற அதே சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஏழிலும், அவர் உலகத்தை இரட்சிக்க வந்த தனது இரட்சிப்பின் உறவை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான உருவகங்களுடன் “நான் இருக்கிறேன்” என்பதை இணைக்கிறார். அனைத்தும் யோவான் எழுதின சுவிசேஷப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை யாதெனில், நானே ஜீவ அப்பம் (யோவான் 6:35, 48, 51); நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் (யோவான் 8:12); நானே ஆடுகளுக்கு வாசல் (யோவான் 10:7, 9); நானே நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14); நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 11:25); நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6); நான் மெய்யான திராட்சச்செடி (யோவான் 15: 1,5).

English



முகப்பு பக்கம்

இயேசு 'நான் இருக்கிறேன்' என்று சொன்னபோது என்ன அர்த்தம் கொண்டார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries