settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவியானவர் யார்?

பதில்


பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து அறிந்துகொள்வதில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக்கப்படும் ஆள்தன்மையில்லாத ஒரு சக்தி அல்லது வல்லமை என்று நினைக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரின் தனித்துவம் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறவேண்டுமானால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று வேதாகமம் பறைசாற்றுகின்றது. மேலும், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; அதாவது சிந்தை, உணர்ச்சி மற்றும் சித்தம் கொண்டிருக்கிற ஒரு நபர் என்றும் வேதாகமம் கூறுகிறது.

அப்போஸ்தலர் 5:3-4 உட்பட வேதாகமத்தின் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதற்கான மிகத்தெளிவான சான்றுகள் இருக்கின்றன. உதாரணமாக, இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று கூறியபின்பு, அவன் “மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான்” என்றும் கண்டிக்கிறார். அதாவது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லுவது என்பது தேவனிடத்தில் பொய் சொல்லுவதற்கு சமம் என்பதை இது காட்டுகின்றது. மேலும், பரிசுத்த ஆவியானவர் தேவனுக்கு மட்டுமே உரிய குணாதியங்களை அல்லது பண்புகளை தானும் உடையவராக இருப்பதால், பரிசுத்த ஆவியானவர் தேவன் தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர் சர்வவியாபியாக இருக்கிறார் என்பதை சங்கீதம் 139:7-8 ல் அறிந்துகொள்ளலாம். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.” மேலும், 1 கொரிந்தியர் 2:10-11 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் சர்வ ஞானி என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்கு உரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்கு உரியவைகளை அறியமாட்டான்.”

மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்ச்சி மற்றும் சித்தம் உடையவராக இருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறிந்துகொள்ளலாம். பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவராக இருக்கிறார் (1 கொரிந்தியர் 2:10). பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30). ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27). ஆவியானவர் தமது சித்தத்தின்படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11). பரிசுத்த ஆவியானவர் தேவன் என்கிற நிலையில், திரித்துவத்தில் மூன்றாம் நபராக இருக்கிறார். ஆவியானவர் இன்ன பிரகாரமாக இருப்பார் என்று இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோலவே, தேவனாக இருக்கிற பரிசுத்த ஆவியானவர் மெய்யாகவே தேற்றரவாளராகவும், ஆலோசனை வழங்குகிறவராக செயல்படமுடியும் (யோவான் 14:16, 26; 15:26).

English



முகப்பு பக்கம்

பரிசுத்த ஆவியானவர் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries