settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிவை விட்டு விலகிச் சென்றுவிடுவாரா?

பதில்


எளிய நிலையில் எடுத்துக்கொள்ளுவோமானால், இல்லை, பரிசுத்த ஆவியானவர் ஒரு உண்மையான விசுவாசியை விட்டு பிரிந்து செல்லமாட்டார். இது புதிய ஏற்பாட்டில் பல பகுதிகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ரோமர் 8:9 நமக்கு சொல்கிறது, “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." பரிசுத்த ஆவியானவரை உள்ளில் கொண்டிராமல் ஒருவர் இருப்பாரானால், அந்த நபர் இரட்சிக்கப்படவில்லை என்று இந்த வசனம் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிவை விட்டு விலகி இருந்தால், அந்த நபர் கிறிஸ்துவோடுள்ள இரட்சிப்பின் உறவை இழந்திருப்பார். இது கிறிஸ்தவர்களின் நித்திய பாதுகாப்பைப் பற்றி வேதாகமம் கற்பிக்கும் காரியங்களுக்கு முரணானது ஆகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் குடிகொண்டிருக்கும் பிரசன்னத்தின் நிரந்தரத்தோடு பேசுகிற மற்றொரு வசனம் யோவான் 14:16 ஆகும். " நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்" என்று இயேசு இங்கே குறிப்பிடுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிவை ஒருபோதும் விட்டுவிலகமாட்டார் என்ற உண்மை எபேசியர் 1:13-14-ல் காணப்படுகிறது. அங்கு விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் "முத்திரை" போடப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறார்கள். “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.” மேலும் அவர் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்கிற உத்தரவாதமாக, பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கு மீட்கப்படும் நாள்வரை அவர் அனுப்பியுள்ளார். ஒரு மகிழுந்து அல்லது ஒரு வீட்டின்பேரில் பணம் செலுத்துவது போலவே, பரிசுத்த ஆவியானவர் அவர்களை வாழ வைப்பதன் மூலம் தம்முடைய எதிர்கால உறவுகளின்பேரில் எல்லா விசுவாசிகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். அனைத்து விசுவாசிகளும் ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருப்பது 2 கொரிந்தியர் 1:22 மற்றும் எபேசியர் 4:30 ஆகிய வேதப்பகுதிகளிலும் காணப்படுகிறது.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரலோகத்திற்கு பரமேறிச் செல்வதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடன் உறவு கொண்டவிதம் "வந்து போகிற" விதமாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் சவுல் ராஜாவினுள் வசித்திருந்தார், ஆனால் அவரை விட்டு விலகிவிட்டார் (1 சாமுவேல் 16:14). மாறாக, ஆவியானவர் தாவீதின்மீது வந்தார் (1 சாமுவேல் 16:13). பத்சேபாவுடனான அவரது விபச்சாரத்திற்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் அவரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவார் என்று தாவீது அஞ்சினார் (சங்கீதம் 51:11). பரிசுத்த ஆவியானவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்திற்கு தேவையான பொருட்களை தயாரிக்க அவருக்கு உதவியது (யாத்திராகமம் 31:2-5), ஆனால் அது நிரந்தர உறவு என்று விவரிக்கப்படவில்லை. பரலோகத்திற்கு இயேசு ஏறிச் சென்ற பிறகு இவை அனைத்தும் மாறியது. பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கி, பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக விசுவாசிகள் உள்ளில் வசித்து தொடர்ந்தார் (அப்போஸ்தலர் 2). பரிசுத்த ஆவியானவரின் நிரந்தரமான வசித்தல் எப்போதுமே நம்முடன் இருப்பதோடு, நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்கிற தேவனுடைய வாக்குறுதியின் நிறைவேறுதலாகும்.

பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிவை விட்டு ஒருபோதும் போகமாட்டார் என்கிறபோதிலும், நாம் பாவம் செய்யும்போது "பரிசுத்த ஆவியானவரைக் அவித்துப்போட" முடியும் (1 தெசலோனிக்கேயர் 5:19) அல்லது "பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுத்தலாம்" (எபேசியர் 4:30). தேவனுடனான நம்முடைய உறவில் பாவம் எப்பொழுதும் விளைவுகளைக் கொண்டுள்ளது. தேவனுடன் உள்ள நம் உறவு கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பானதாக இருக்கிறபோது, நம் வாழ்வில் இருக்கிற அறிக்கையிடப்படாத பாவம் தேவனுடன் உள்ள நம் உறவிற்கு தடையாக இருப்பதோடு திறம்பட நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் வேலையை அவித்துப்போடவும் முடியும். அதனால்தான், நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடுவது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). எனவே, பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டு ஒருபோதும் விலகமாட்டார் என்கிறபோதிலும், அவருடைய பிரசன்னத்தின் நன்மையும் மகிழ்ச்சியும் உண்மையில் நம்மிடமிருந்து புறப்படும்.

Englishமுகப்பு பக்கம்

பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிவை விட்டு விலகிச் சென்றுவிடுவாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries