settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவன் அரசியல் யாவை?

பதில்


தன்னிச்சையான விவாதத்தைத் தூண்டும், அது ஒரு வெளிப்படையான வாதமாக இல்லாவிட்டால், அது அரசியல் சம்பந்தப்பட்ட விவாதம் தான்—கிறிஸ்தவ விசுவாசிகளிடையே கூட இதைக் காணலாம். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, அரசியலில் நமது அணுகுமுறை மற்றும் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்? "மதமும் அரசியலும் ஒன்றாக கலப்பதில்லை" என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது மெய்யாகவே உண்மையா? நமது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வெளியே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்க முடியுமா? பதில் இல்லை, நம்மால் முடியாது. அரசியல் மற்றும் அரசாங்கத்தின் மீதான நமது நிலைப்பாடு குறித்து வேதாகமம் இரண்டு சத்தியங்களைத் தருகிறது.

முதல் சத்தியம் என்னவென்றால், தேவனுடைய சித்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஊடுருவிச் செல்கிறது. எல்லாவற்றிலும் எல்லாரிலும் தேவனுடைய விருப்பமே முதன்மையானது (மத்தேயு 6:33). தேவனுடைய திட்டங்களும் நோக்கங்களும் நிலையானவை, அவருடைய சித்தம் மீற முடியாதது. அவர் எதை நோக்கமாகக் கொண்டாரோ அதை நிறைவேற்றுவார், அவருடைய சித்தத்தை எந்த அரசாங்கமும் முறியடிக்க முடியாது (தானியேல் 4:34-35). உண்மையில், தேவனே "ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்" (தானியேல் 2:21) ஏனெனில் "உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் 4:17). இந்த உண்மையைப் பற்றிய தெளிவான புரிதல், அரசியல் என்பது தேவன் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தும் ஒரு வழிமுறை மட்டுமே என்பதை அறிய நமக்கு உதவும். தீமைக்கு அர்த்தம் கொண்டு, பொல்லாதவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலும், அதைத் தேவன் நன்மையாக முடியப்பண்ணுகிறார், "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" (ரோமர் 8:28).

இரண்டாவதாக, நம் அரசாங்கத்தால் நம்மைக் இரட்சிக்க முடியாது என்கிற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! தேவனால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும். நாம் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசு அல்லது எந்த அப்போஸ்தலர்களும் எந்த நேரத்தையும் அல்லது வல்லமையையும் செலவழித்து விசுவாசிகளை அதன் விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடான மற்றும் ஊழல் பழக்கங்களை அரசாங்கம் மூலம் எவ்வாறு சீர்திருத்துவது என்பதைப் பற்றி போதித்ததில்லை. ரோமப் பேரரசின் அநீதியான சட்டங்கள் அல்லது மிருகத்தனமான திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, விசுவாசிகளுக்கு கீழ்ப்படியாமை காட்டும்படி அப்போஸ்தலர்கள் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, அப்போஸ்தலர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும், இன்று நமக்கும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், சுவிசேஷத்தின் மாற்றும் சக்திக்கு தெளிவான அத்தாட்சியை அளிக்கும் வாழ்க்கையை வாழவும் கட்டளையிட்டனர்.

சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நல்ல குடிமக்களாக இருப்பதே அரசாங்கத்திற்கு நமது பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை (ரோமர் 13:1-2). தேவன் எல்லா அதிகாரத்தையும் நிறுவியுள்ளார், மேலும் அவர் நமது நன்மைக்காக அவ்வாறு செய்கிறார், "நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி" (1 பேதுரு 2:13-15). ரோமர் 13:1-8-ல் பவுல் நமக்கு அதிகாரத்தில் ஆட்சி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறுகிறார்—நம் நன்மைக்காக—வரி வசூலிப்பதும், அமைதியைக் காப்பதும் ஆகும். நம்மிடம் குரல் இருந்தால், நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால், நம்முடைய கருத்துக்களுடன் மிக நெருக்கமாக உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் கலாச்சார ஒழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்வுக்கான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கமுடியும் என்பது சாத்தானின் மிகப்பெரிய ஏமாற்று வேலைகளில் ஒன்றாகும். மாற்றத்திற்கான ஒரு தேசத்தின் நம்பிக்கை எந்த நாட்டின் ஆளும் வர்க்கத்திலும் காணப்படுவதில்லை. வேதாகம சத்தியங்களையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் பாதுகாப்பதும், முன்னேறுவதும், பாதுகாப்பதும் அரசியல்வாதிகளின் வேலை என்று திருச்சபை நினைத்தால் அது தவறு செய்து விட்டது.

திருச்சபையின் தனித்துவமான, தேவன் கொடுத்த நோக்கம் அரசியல் செயல்பாட்டில் இல்லை. வேதத்தில் எங்கும் நம் வல்லமையையோ, நேரத்தையோ, பணத்தையோ அரசாங்க காரியங்களில் செலவிட வேண்டும் என்கிற கட்டளை நமக்கு இல்லை. நமது பணி அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தேசத்தை மாற்றுவதில் இல்லை, மாறாக தேவனுடைய வார்த்தையின் மூலம் இருதயங்களை மாற்றுவதில் உள்ளது. கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு எப்படியாவது அரசாங்கக் கொள்கையுடன் இணைக்கப்படலாம் என்று விசுவாசிகள் நினைக்கும் போது, அவர்கள் திருச்சபையின் பணியை சிதைக்கிறார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதும், நம் காலத்தின் பாவங்களுக்கு எதிராகப் பிரசங்கிப்பதும்தான் நமது கிறிஸ்தவக் கட்டளை. ஒரு கலாச்சாரத்தில் உள்ள தனிநபர்களின் இருதயங்கள் கிறிஸ்துவால் மாற்றப்பட்டால் மட்டுமே கலாச்சாரம் அந்த மாற்றத்தை பிரதிபலிக்கத் தொடங்கும்.

காலங்காலமாக விசுவாசிகள், பகைச் செயல் புரிகிற, அடக்குமுறை, புறமத அரசாங்கங்களின் கீழ் வாழ்ந்திருக்கிறார்கள், மேலும் செழித்து வளர்ந்திருக்கிறார்கள். இரக்கமற்ற அரசியல் ஆட்சிகளின் கீழ், பெரும் கலாச்சார அழுத்தத்தின் கீழ் தங்கள் விசுவாசத்தை நிலைநிறுத்திய முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு இது குறிப்பாக உண்மையாக இருந்தது. உலகத்திற்கு ஒளியாகவும், பூமிக்கு உப்பாகவும் இருப்பவர்கள் தங்கள் அரசாங்கங்கள் அல்ல, தாங்கள்தான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஆளும் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், அவர்களை மதிக்கவும், கனம்பண்ணவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கூட பவுலின் போதனையை கடைபிடித்தனர் (ரோமர் 13:1-8). மிக முக்கியமாக, விசுவாசிகளாக, தேவன் மட்டுமே அளிக்கும் பாதுகாப்பில் தங்களுடைய விசுவாசம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். இன்று நமக்கும் அதே நிலைதான். நாம் வேதாகமத்தின் போதனைகளைப் பின்பற்றும்போது, நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியபடி நாம் உலகின் ஒளியாக மாறுகிறோம் (மத்தேயு 5:16).

அரசியல் அமைப்புகள் உலகத்தின் இரட்சகர் அல்ல. அனைத்து மனிதகுலத்திற்கும் இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு தேசிய அரசாங்கமும் நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நம் உலகத்திற்கு இரட்சிப்பு தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மனித சக்தி, பொருளாதார பலம், ராணுவ பலம், அரசியல் போன்றவற்றால் இரட்சிப்பை அடைய முடியாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டினார். மன அமைதி, மனநிறைவு, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி—மற்றும் மனிதகுலத்தின் இரட்சிப்பு—அவரது விசுவாசம், அன்பு மற்றும் கிருபை ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது.

Englishமுகப்பு பக்கம்

கிறிஸ்தவன் அரசியல் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries