settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவர்கள் இரவு விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா? கிளப்புக்கு செல்லுவது பாவமா?

பதில்


வெளிப்படையாகச் சொல்வதென்றால், இரவு விடுதிகள் சாத்தானால் கட்டுப்படுத்தப்படும் உலகின் ஒரு பகுதியாகும். பாவ இச்சைகளுக்கு தன்னையே விட்டுக்கொடுக்கும் நோக்கத்திற்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு விடுதிகள் முதன்மையாக இரண்டு நோக்கங்களுக்காக உள்ளன: மது அருந்துதல் மற்றும் எதிர் பாலின உறுப்பினர்களைச் சந்திப்பது, பெரும்பாலும் பாலியல் செயல்பாடுகளை மனதில் கொண்டு இந்த சந்திப்புக்கள் அரங்கேறுகிறது. ஆம், இசை மற்றும் நடனம் உள்ளது, ஆனால் முதன்மையாக தனிமையில் இருப்பவர்கள் குடிப்பதற்கும் யாரையாவது சந்திப்பதற்கும் கிளப்புக்குச் செல்கிறார்கள். இரவு விடுதிகள் உலகத்திற்குரியவை, கிறிஸ்தவர்கள் உலகில் இருக்க வேண்டும் என்றாலும், நாம் அதில் இருக்கக் கூடாது. உலகமாக இருப்பது என்பது பாவ சுபாவத்தை ஈர்க்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டுவதும் விரும்புவதும் ஆகும்.

பவுல், கிறிஸ்தவர்களிடம் பேசுகையில், எபேசியர் 4:17-24-ல் உள்ள உலகப் பழக்கவழக்கங்களைப் பற்றிய பிரச்சினையை எடுத்துரைக்கிறார், "ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." பேராசையுடன் ஒவ்வொரு விதமான அசுத்தத்தையும் கடைப்பிடிப்பதற்காக தேவனை ஒதுக்கிவிட்டு சிற்றின்பத்திற்கு தங்களையே ஒப்படைப்பவர்களைக் குறித்து இங்கே பவுல் விவரிக்கிறார்.

வெளிப்படையாக, நாம் பாவத்திற்கு அவ்வளவு எளிதாகவும் வேண்டுமென்றே நம்மையே விட்டுக்கொடுக்க வேண்டுமென்று தேவன் விரும்புவதில்லை. இங்கே தேவன் சொல்வதைக் கவனியுங்கள்: "முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்." நம்முடைய பாவச் சுபாவத்திற்கு நம்மையே விட்டுக்கொடுக்கும்போது, நம் ஆசைகளால் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தேவன் கூறுகிறார். சாத்தான் ஒரு தலைசிறந்த கள்ளத்தனமானவன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தான் கவர்ச்சிகரமானதாக மேற்பரப்பில் தோன்றும் ஒன்றை முன்வைக்கிறான். கிளப்புக்குச் செல்லுதலின் ஈர்ப்பு என்னவென்றால், அது மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. நாம் பார்க்காதது பின்விளைவுகளாகும், ஏனென்றால் சாத்தான் நம் மனதில் சிற்றின்ப ஈர்ப்பை முன்னணியில் வைத்திருக்கிறான். பெரும்பாலான இரவு விடுதிகளில் காணப்படும் பாலியல் களியாட்டுகள், ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் அனைத்தும் உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் மிகவும் அழிவுகரமானவை. உடலுறவுக்கு என்று தேவன் ஒரு இடம் வைத்துள்ளார், அது திருமணத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, அங்கு எஸ்டிடி, எச்ஐவி, குற்ற உணர்வு, தனிமை ஆகியவை இல்லை—இதில் தேவனை நம்பாதவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் நீதியாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், ஏனென்றால் அவர் அப்படி இருக்கவே நம்மைப் படைத்தார். தேவன் உத்தேசித்துள்ள வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகள், இந்த உலகம் வழங்கும் அற்பமான, குறுகிய கால சிலிர்ப்புகளை விட மிக அதிகம். இரவு விடுதியில் இருக்கும் அல்லது பழகிய பலர் இதையே சொல்கிறார்கள்—மகிழ்ச்சியும் இல்லை, நிறைவும் இல்லை; வெறுமை மட்டுமே உள்ளது. தேவனால் மட்டுமே நம் தேவைகளை நிறைவேற்றி, நாம் அனைவரும் தேடும் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தர முடியும். கிளப்பிங் மலிவான சாயலைத் தவிர வேறு எதையும் வழங்குவதில்லை. இரவு விடுதிகளில் நிரந்தரமான மகிழ்ச்சி இல்லை, பாவத்திற்கான சோதனை மட்டுமே இருக்கிறது.

இத்தகைய இடங்கள் கிறிஸ்தவர்களுக்கு உரிய இடம் அல்ல. வெளிப்படையான சோதனைகளைத் தவிர, உலகில் நமது கிறிஸ்தவ சாட்சியின் பிரச்சினை உள்ளது. அவிசுவாசிகள் ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்பவர் பாவ வாழ்வில் ஈடுபடுவதைக் காணும்போது, கிறிஸ்து அவமதிக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார். மனிதர்கள் நம் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம் பிதாவை மகிமைப்படுத்தும்படி, நம்முடைய வெளிச்சங்களை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் (மத்தேயு 5:16). கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கிற நமது புதிய வாழ்க்கையின் வெளிச்சம் ஒரு இரவு விடுதியில் எவ்வாறு பிரகாசிக்க முடியும் என்பதைப் பார்ப்பது கடினம். கிறிஸ்தவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர் அல்லது அவள் அங்கு இருப்பதன் மூலம் பார்க்கும் உலகிற்கு அளிக்கும் சாட்சி அழிவுகரமானது மற்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவர்கள் இரவு விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா? கிளப்புக்கு செல்லுவது பாவமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries