settings icon
share icon

ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்

எழுத்தாளர்: ரோமர் 1:1, ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று அடையாளம் காட்டுகிறது. ரோமர் 16:22-ல், பவுல் தனது வார்த்தைகளை எழுத தெர்தியு என்னும் மனிதரைப் பயன்படுத்தினார் என்பதை வாசிக்கிறோம்.

எழுதப்பட்ட காலம்: ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம் கி.பி. 56 முதல் கி.பி. 58 வரையிலுள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: திருச்சபைகளுக்கு பவுல் எழுதிய அனைத்து நிருபங்களையும் போலவே, இந்த நிருபத்திலும் அவருடைய எழுத்தின் நோக்கம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை பிரஸ்தாப படுத்ததக்கதான கோட்பாட்டைக் கற்பிப்பதும், அவருடைய நிருபத்தை பெறும் விசுவாசிகளைத் நல்வழிப்படுத்தி ஆவிக்குரிய வாழ்வில் வளரத்தக்கதாக ஊக்குவிப்பதும் ஆகும். இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டதோ அவர்களைக் குறித்து பவுல் குறிப்பாக அக்கறை கொண்டிருந்தார் – அவர்கள் தான் “ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமானவர்கள்” (ரோமர் 1:2). அவரே ஒரு ரோமக் குடியுரிமை பெற்ற குடிமகனாக இருந்ததால், ரோமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்தில் இருப்பவர்கள் மீது அவருக்கு ஒரு தனித்துவமான அக்கறை மற்றும் ஆர்வம் இருந்தது. அவர் இதுவரை, ரோமில் உள்ள திருச்சபைக்கு விஜயம் செய்யவில்லை என்பதால், இந்த நிருபம் பவுலைக் குறித்து அவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் இருந்தது.

திறவுகோல் வசனங்கள்: ரோமர் 1:16, “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.”

ரோமர் 3:9-11, “ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை.”

ரோமர் 3:21, “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.”

ரோமர் 3:23, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிப் போனார்கள்.”

ரோமர் 5:8, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”

ரோமர் 6:23, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”

ரோமர் 8:9, “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.”

ரோமர் 8:28, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

ரோமர் 8:37-39, “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”

ரோமர் 10:9-10, “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”

ரோமர் 12:1, “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”

ரோமர் 12:19, “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”

ரோமர் 16:17, “அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.”

சுருக்கமான திரட்டு: இந்த திருச்சபையில் கடைசியாக ஊழியம் செய்ய முடிந்ததைப் பற்றி பவுல் உற்சாகமாக இருந்தார், எல்லோரும் அந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார்கள் (ரோமர் 1:8-15). எருசலேமிலுள்ள ஏழைகளுக்காக வழங்கப்பட்ட தர்மபணத்தை வழங்குவதற்காக பவுல் எருசலேமுக்குச் செல்வதற்கு சற்று முன்பு கொரிந்துவிலிருந்து இந்த நிருபத்தை ரோமர்களுக்கு எழுதினார். பவுல் ஸ்பானியா தேசத்திற்கு செல்லவும் பின்னர் அங்கிருந்து ரோமாபுரி செல்லவும் விரும்பினார் (ரோமர் 15:24), ஆனால் அவர் எருசலேமில் கைது செய்யப்பட்டபோது அவரது திட்டங்கள் தடைபட்டன. அவர் இறுதியில் ஒரு கைதியாக ரோமாபுரிக்கு செல்லும்படியாயிற்று. கொரிந்துக்கு அருகிலுள்ள கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய பெபேயாள் (ரோமர் 16:1), பெரும்பாலும் இந்தக் நிருபத்தை ரோமுவிற்கு கொண்டு சென்றிருக்கலாம்.

ரோமர் புத்தகம் முதன்மையாக ஒரு உபதேசத்தின் கிரியையாகும் மற்றும் அதை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: தேவையான நீதி, 1:18–3:20; வழங்கப்பட்ட நீதி, 3:21–8:39; நிரூபிக்கப்பட்ட நீதி, 9:1–11:36; மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட நீதி, 12:1–15:13. இந்த நிருபத்தின் முக்கிய கருப்பொருள் நிச்சயமாக வெளிப்படையானதாகும் – அதாவது நீதி. பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட பவுல் முதலில் எல்லா மனிதர்களையும் அவர்கள் செய்த பாவத்தை கண்டிக்கிறார். தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை ரோமில் உள்ளவர்களுக்கும் பிரசங்கிப்பதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவர்கள் சரியான பாதையில் தங்கியிருப்பதாக உறுதியளிப்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. அவர் சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்படவில்லை என்று அவர் வலுவாக சுட்டிக்காட்டுகிறார் (ரோமர் 1:16), ஏனென்றால் எல்லோரும் இரட்சிக்கப்படுவதற்கு அதுவே தேவ வல்லமையாக இருக்கிறது.

ரோமர் புத்தகம் தேவனைப் பற்றியும், அவர் யார், அவர் என்ன செய்தார் என்பதையும் சொல்லுகிறது. இது இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய மரணம் என்ன சாதித்தது என்பதைப் பற்றியும் சொல்லுகிறது. இது நம்மைப் பற்றியும், கிறிஸ்து இல்லாமல் நாம் எப்படி இருந்தோம், கிறிஸ்துவை விசுவாசித்து அவர்மேல் நம்பிக்கை வைத்தபின் நாம் யார் என்பதையுங்குறித்து சொல்லுகிறது. கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நேராக்க வேண்டும் என்று தேவன் கோரவில்லை என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். மாறாக நாம் பாவிகளாக இருந்தபோது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அறிவிக்கிறது.

இணைப்புகள்: பவுல் பல பழைய ஏற்பாட்டு நபர்களையும் நிகழ்வுகளையும் ரோமர் புத்தகத்தில் மேற்கோள் காண்பித்து அவைகளை புகழ்பெற்ற சத்தியங்களின் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்துகிறார். ஆபிரகாம் விசுவாசித்தார், தேவன் அதை அவருக்கு நீதியாக கணக்கிட்டார், இது ஆபிரகாமுடைய செயல்களால் அல்ல (ரோமர் 4:1-5). ரோமர் 4:6-9-ல், அதே சத்தியத்தை மீண்டும் வலியுறுத்திய தாவீதைப் பவுல் குறிப்பிடுகிறார்: “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.” பவுல் ஆதாமைப் பயன்படுத்தி ரோமர்களுக்கு மரபுரிமையான பாவத்தின் கோட்பாட்டை விளக்குகிறார், மேலும் கிறிஸ்தவர்களின் கொள்கையை விளக்குவதற்கு வாக்குறுதியின் பிள்ளையான சாரா மற்றும் ஈசாக்கின் ஜீவசரிதையைப் பயன்படுத்துகிறார். அதாவது கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய தெய்வீக கிருபையின் வாக்குத்தத்த பிள்ளைகளாக மாறியிருக்கிறோம். 9-11 வரையிலுள்ள அதிகாரங்களில், பவுல் இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றை விவரிக்கிறார், மேலும் தேவன் இஸ்ரவேலை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை (ரோமர் 11:11-12) என்று அறிவிக்கிறார், ஆனால் புறஜாதியார்கள் இரட்சிப்புக்குள் கொண்டு வரப்படுவதற்கான முழு எண்ணிக்கையும் வரும் வரை மட்டுமே அவர்களை சிறிது "தடுமாற" அனுமதித்திருக்கிறார்.

நடைமுறை பயன்பாடு: நம்மை இரட்சித்துக்கொள்ள நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை ரோமர் புத்தகம் தெளிவுபடுத்துகிறது. நாம் செய்த ஒவ்வொரு “நல்ல” செயலும் தேவனுக்கு முன்பாக ஒரு அழுக்கான கந்தையைப் போன்றதாகும். நாம் நம்முடைய அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்துவிட்டோம், தேவனுடைய கிருபையும் இரக்கமும் மட்டுமே நம்மைக் இரட்சிக்க முடியும். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் மரிக்கும்படி அனுப்புவதன் மூலம் அந்த கிருபையையும் இரக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். நாம் நம் வாழ்க்கையை கிறிஸ்துவிடமாய் திருப்பும்போது, நம்முடைய பாவ இயல்புகளால் இனி நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக ஆவியினால் கட்டுப்படுத்தப்படுகிறோம். இயேசுவே கர்த்தர் என்று நாம் அறிக்கை செய்து, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டார் என்று விசுவாசித்தால், நாம் இரட்சிக்கப்படுவோம், அதன் மூலமாக நாம் மறுபடியும் பிறக்கிறோம். நமது வாழ்க்கையை ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து நம் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். நம்மை இரட்சித்த தேவனை ஆராதிப்பது நம்முடைய உயர்ந்த விருப்பமாக இருக்க வேண்டும். ரோமர் 1:16-ஐப் பயன்படுத்துவதும், சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்படாமல் இருப்பதும் ரோமர் புத்தகத்தின் சிறந்த பயன்பாடாகும். மாறாக, அதை அறிவிப்பதில் நாம் அனைவரும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக!

English



முகப்பு பக்கம்

ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries