புலம்பல் புத்தகம்


கேள்வி: புலம்பல் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: புலம்பல் புத்தகம் அதன் எழுத்தாளரை வெளிப்படையாக யாரென்று அடையாளம் காண்பிக்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி புலம்பல் புத்தகத்தை எழுதினார் என்பது பாரம்பரியம். பாபிலோனியர்கள் எருசலேமை அழித்ததற்கு இதை எழுதிய எழுத்தாளர் சாட்சியாக இருக்கிறார் என்று இந்த பார்வை கருதுகிறது. எரேமியா இந்த தகுதிக்கு மிகவும் சரியாகப் பொருந்துகிறார் (2 நாளாகமம் 35:25; 36:21-22).

எழுதப்பட்ட காலம்: புலம்பல் புத்தகம் கி.மு. 586 மற்றும் கி.மு. 575-க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம், அதாவது எருசலேமின் வீழ்ச்சியின் போது அல்லது அது நிகழ்ந்த விரைவில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: யூதா தேசத்தின் தொடர்ச்சியான மற்றும் மனந்திரும்பி வருத்தப்படாத விக்கிரக ஆராதனையின் விளைவாக, எருசலேம் நகரத்தை முற்றுகையிடவும்,தேசத்தை கொள்ளையடிக்கவும், எரிக்கவும் அழிக்கவும் தேவன் பாபிலோனியர்களை அனுமதித்தார். ஏறக்குறைய 400 ஆண்டுகளாக நின்றிருந்த சாலமோனின் தேவாலயம் எரிக்கப்பட்டு தரைமட்டமானது. இந்த நிகழ்வுகளை நேரில் கண்ட சாட்சியான எரேமியா தீர்க்கதரிசி, யூதாவிற்கும் எருசலேமுக்கும் என்ன நடந்தது என்பதற்கான புலம்பலாக இந்த புலம்பல் புத்தகத்தை எழுதினார்.

திறவுகோல் வசனங்கள்: புலம்பல்கள் 2:17, “கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.”

புலம்பல்கள் 3:22-23, “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.”

புலம்பல்கள் 5:19-22, “கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!”

சுருக்கமான திரட்டு: புலம்பல் புத்தகம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒரு தனி கவிதையை குறிக்கும் விதமாக இருக்கிறது. மூலமொழியாகிய எபிரேய மொழியில், வசனங்கள் அகரவரிசையில் எழுதப்பட்டதாகும், அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரேய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துடன் தொடங்குகின்றன. புலம்பல் புத்தகத்தில், எருசலேம் மீது தீர்ப்பைக் கொண்டுவருவதற்கான தேவனுடைய கருவி பாபிலோனியர்கள் என்பதை எரேமியா தீர்க்கதரிசி புரிந்துகொள்கிறார் (புலம்பல் 1:12-15; 2:1-8; 4:11). தேவனுடைய கோபத்தை கொட்டுவதற்கு பாவமும் கழகமும் தான் காரணம் என்று புலம்பல்கள் தெளிவுபடுத்துகின்றன (1:8-9; 4:13; 5:16). துயரத்தின் போது புலம்பல் மிகவும் பொருத்தமானது, ஆனால் அது விரைவாக மனச்சோர்வு மற்றும் மனந்திரும்புதலுக்கு வழிவகுக்க வேண்டும் (புலம்பல் 3:40-42; 5:21-22).

முன்னிழல்கள்: எரேமியா தனது ஜனத்தின் மீதும் அவர்களின் நகரத்தின் மீதும் ஆழ்ந்த மற்றும் நிலையான ஆர்வம் கொண்டிருந்தமைக்காக அவர் "அழுகிற தீர்க்கதரிசி" என்று அறியப்பட்டார் (புலம்பல் 3:48-49). ஜனங்களின் பாவங்கள் குறித்தும், தேவனை அவர்கள் நிராகரித்ததாலும் இதே துக்கம் இயேசு எருசலேமை நெருங்கி ரோமர்களின் கைகளில் அது அழிவை எதிர்நோக்கியபோது வெளிப்படுத்தினார் (லூக்கா 19:41-44). யூதர்கள் தங்கள் மேசியாவை நிராகரித்ததால், தேவன் தம் ஜனங்களை தண்டிக்க ரோமர்கள் முற்றுகையைப் பயன்படுத்தினார். ஆனால், தம்முடைய பிள்ளைகளைத் தண்டிப்பதில் தேவன் மகிழ்ச்சியடையவில்லை, பாவத்திற்கான ஏற்பாடாக இயேசு கிறிஸ்துவை அவர் அளித்திருப்பது ஜனங்கள்மீது அவருக்கு இருக்கும் அவருடைய மிகுந்த இரக்கத்தைக் காட்டுகிறது. ஒரு நாள், கிறிஸ்துவின் மூலமாக, தேவன் எல்லா கண்ணீரையும் துடைப்பார் (வெளிப்படுத்துதல் 7:17).

நடைமுறை பயன்பாடு: பயங்கரமான நியாயத்தீர்ப்பில் கூட, தேவன் உண்மையுள்ள மற்றும் உண்மையை காக்கிற தேவனாக இருக்கிறார் (புலம்பல் 3:24-25). நாம் அவரிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றிருந்தாலும், நாம் அவரிடம் திரும்பி அவரை இரக்கமுள்ளவராகவும் மன்னிப்பவராகவும் காணலாம் என்ற நம்பிக்கை உள்ளது (1 யோவான் 1:9). நம்முடைய தேவன் ஒரு அன்பான தேவன் (புலம்பல் 3:22), அவருடைய மிகுந்த அன்பும் இரக்கமும் காரணமாக, நம்முடைய பாவங்களில் நாம் அழிந்துபோகாமல், அவருடன் நித்தியமாக வாழும்படி அவர் தம்முடைய குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16). தேவனுடைய உண்மையும் (புலம்பல் 3:23) மற்றும் மீட்பும் (புலம்பல் 3:26) நமக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் பண்புகளாகும். அவர் அக்கறையற்ற, சலன புத்தியுள்ள ஒரு தேவன் அல்ல, ஆனால் அவரிடம் திரும்பும் அனைவரையும் அவர் விடுவிப்பார், அவருடைய தயவைப் பெற அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் நாம் அழிந்து போகாமல் மற்றும் நிர்மூலமாகாமல் இருக்க கர்த்தருடைய இரக்கத்தைப் பெற அவரை அழைக்கிறோம் (புலம்பல் 3:22 ).

English


முகப்பு பக்கம்
புலம்பல் புத்தகம்