settings icon
share icon

ஏசாயாவின் புத்தகம்

எழுத்தாளர்: ஏசாயா 1:1, ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளரை ஏசாயா தீர்க்கதரிசி என்று அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: ஏசாயா புத்தகம் கி.மு. 739 முதல் கி.மு. 681 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.

எழுதப்பட்டதன் நோக்கம்: ஏசாயா தீர்க்கதரிசி முதன்மையாக யூதா ராஜ்யத்திற்கு தீர்க்கதரிசனம் சொல்ல அழைக்கப்பட்டார். யூதா மறுமலர்ச்சி மற்றும் கிளர்ச்சி காலங்களை கடந்து கொண்டிருந்தது. அசீரியா மற்றும் எகிப்தால் யூதா அழிக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டார்கள், ஆனால் தேவனுடைய இரக்கத்தால் காப்பாற்றப்பட்டார்கள். ஏசாயா பாவத்திலிருந்து மனந்திரும்புதலின் செய்தியையும், எதிர்காலத்தில் தேவனுடைய விடுதலையின் நம்பிக்கையான எதிர்பார்ப்பையும் அறிவித்தார்.

திறவுகோல் வசனங்கள்: ஏசாயா 6:8, “பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.”

ஏசாயா 7:14, “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.”

ஏசாயா 9:6, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”

ஏசாயா 14:12-13, “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,”

ஏசாயா 53:5-6, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”

ஏசாயா 65:25, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.”

சுருக்கமான திரட்டு: ஏசாயா புத்தகம் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் இரட்சிப்பையும் வெளிப்படுத்துகிறது. தேவன் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3), ஆகவே பாவம் தண்டிக்கப்படாமல் இருக்க அவர் அனுமதிக்க முடியாது (ஏசாயா 1:2; 2:11-20; 5:30; 34:1-2; 42:25) ). தேவனுடைய வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை "பட்சிக்கிற அக்கினி" என்று ஏசாயா சித்தரிக்கிறார் (ஏசாயா 1:31; 30:33).

அதே சமயம், தேவன் இரக்கம், கிருபை மற்றும் மனதுருகும் இரக்கத்தின் தேவனாக இருக்கிறார் என்பதை ஏசாயா புரிந்துகொள்கிறார் (ஏசாயா 5:25; 11:16; 14:1-2; 32:2; 40:3; 41:14-16). இஸ்ரவேல் தேசம் (யூதா மற்றும் இஸ்ரேல் இரண்டும்) தேவனுடைய கட்டளைகளுக்கு குருடாகவும் செவிடாகவும் இருக்கிறது (ஏசாயா 6:9-10; 42:7). யூதா தேசம் ஒரு திராட்சைத் தோட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது, அது மிதிக்கப்படும் (ஏசாயா 5:1-7). அவருடைய இரக்கம் மற்றும் இஸ்ரேலுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் காரணமாக மட்டுமே, இஸ்ரேலையும் யூதாவையும் முற்றிலுமாக அழிக்க தேவன் அனுமதிக்க மாட்டார். அவர் மறுசீரமைப்பு செய்து, மன்னிப்பளித்து மற்றும் அவர்களை குணப்படுத்துவார் (43:2; 43:16-19; 52:10-12).

பழைய ஏற்பாட்டில் உள்ள வேறு எந்த ஒரு புத்தகத்தையும் விட, ஏசாயா புத்தகம் மேசியா மூலம் வரும் இரட்சிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. மேசியா ஒரு நாள் நீதியிலும் நியாயத்திலும் ஆட்சி செய்வார் (ஏசாயா 9:7; 32:1). மேசியாவின் ஆட்சி இஸ்ரேலுக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் தரும் (ஏசாயா 11:6-9). மேசியாவின் மூலம், இஸ்ரேல் எல்லா தேசங்களுக்கும் ஒரு வெளிச்சமாக இருக்கும் (ஏசாயா 42:6; 55:4-5). பூமியில்மேல் மேசியாவின் ராஜ்யம் (ஏசாயா 65-66 அதிகாரங்கள்) ஏசாயா புத்தகம் முழுவதும் சுட்டிக்காட்டப்படுகிற குறிக்கோளாக இருக்கிறது. மேசியாவின் ஆட்சியின் போதுதான் தேவனுடைய நீதியானது உலகிற்கு முழுமையாக வெளிப்படும்.

ஒரு முரண்பாடாக, ஏசாயா புத்தகம் மேசியாவை துன்பப்படுபவராக முன்வைக்கிறது. மேசியா பாவத்திற்காக துன்பப்படுவதை ஏசாயா 53 அதிகாரம் மிகதெளிவாக விவரிக்கிறது. அவருடைய காயங்களின் மூலம்தான் குணமடைதல் பெறப்படுகிறது. அவருடைய பாடுகளின் மூலம்தான் நம்முடைய அக்கிரமங்கள் நீக்கப்படுகின்றன. இந்த வெளிப்படையான முரண்பாடு இயேசு கிறிஸ்துவின் நபரில் முழுமையாகத் தீர்க்கப்படுகிறது. இயேசு தனது முதல் வருகையில், ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பாடுகளை அனுபவிக்கிற ஊழியராக இருந்தார். அவருடைய இரண்டாவது வருகையில், இயேசு சமாதான பிரபுவாக வென்று வெற்றிவாகை சூடி ஆளும் ராஜாதி ராஜாவாக இருப்பார் (ஏசாயா 9:6).

முன்னிழல்கள்: மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஏசாயாவின் 53-ஆம் அதிகாரம் வரவிருக்கும் மேசியாவையும், நம்முடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக அவர் தாங்கிக் கொள்ளும் துன்பங்களையும் விவரிக்கிறது. தேவன் தனது இறையாண்மையில், இந்த அதிகாரத்தின் ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும், பழைய ஏற்பாட்டின் மற்ற அனைத்து மேசியாவின் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற சிலுவையில் அறையப்பட ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிட்டார். 53-ஆம் அத்தியாயத்தின் சித்திரங்கள் வருத்தம் அளிக்கிற மற்றும் நிறைவேறப்போகிற தீர்க்கதரிசனமானது நற்செய்தியின் முழுமையான சித்திரத்தைக் கொண்டுள்ளது. இயேசு வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டார் (வச. 3; லூக்கா 13:34; யோவான் 1:10-11), தேவனால் நொறுக்கப்பட்டார் (வச .4; மத்தேயு 27:46), நம்முடைய மீறுதல்களுக்காக காயப்பட்டார் (வச. 5; யோவான் 19:34; 1 பேதுரு 2:24). அவருடைய துன்பத்தினால், அவர் நமக்குத் தகுதியான தண்டனையைச் செலுத்தி, நம்முடைய பாவங்களுக்காக இறுதியான மற்றும் பரிபூரணமான பலியானார் (வச. 5; எபிரெயர் 10:10). அவர் பாவமற்றவராக இருந்தபோதிலும், தேவன் நம்முடைய பாவத்தை அவர்மீது வைத்தார், நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக மாறினோம் (2 கொரிந்தியர் 5:21).

நடைமுறை பயன்பாடு: ஏசாயா புத்தகம் நம்முடைய இரட்சகரை மறுக்கமுடியாத விவரங்களோடு மிகவும் விரிவாக நமக்கு முன்வைக்கிறது. அவர் மட்டும்தான் பரலோகத்திற்கு செல்லுவதற்கான ஒரே வழி, தேவனுடைய கிருபையைப் பெறுவதற்கான ஒரே வழியும் ஒரே சத்தியமும் ஒரே ஜீவனும் அவரே (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12). கிறிஸ்து நமக்குக் கொடுத்த விலையை அறிந்தால், “இவ்வளவு பெரிதான இரட்சிப்பை” நாம் எவ்வாறு புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்? (எபிரெயர் 2:3). கிறிஸ்துவிடம் வந்து அவர் அளிக்கும் இரட்சிப்பை மட்டுமே தழுவுவதற்கு பூமியில் சில, குறுகிய ஆண்டுகள் மட்டுமே உள்ளன. மரணத்திற்குப் பிறகு இரண்டாவது வாய்ப்பு இல்லை, நரகத்தில் நித்தியகாலமாக தண்டனை.

கிறிஸ்துவை விசுவாசிப்பதாகக் கூறும் நபர்கள் இரு முகம் கொண்டவர்கள், நயவஞ்சகர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏசாயா இஸ்ரவேல் தேசத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கான சிறந்த சுருக்கம் அதுவாக இருக்கலாம். இஸ்ரவேல் நீதியின் தோற்றத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அது ஒரு ஒரு புறம்பான முகப்பாக மட்டுமே இருந்தது. ஏசாயா புத்தகத்தில், ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரேலுக்கு வெளியில் மட்டுமல்ல, முழு இருதயத்தோடும் தேவனுக்குக் கீழ்ப்படியும்படி சவால் விடுக்கிறார். ஏசாயாவின் விருப்பம் என்னவென்றால், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு வாசிப்பவர்கள் துன்மார்க்கத்திலிருந்து விலகி, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலுக்காக திரும்பவேண்டும் என்பது மட்டுமேயாகும்.

English



முகப்பு பக்கம்

ஏசாயாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries