ஓசியா புத்தகம்


கேள்வி: ஓசியா புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: ஓசியா 1:1, புத்தகத்தின் எழுத்தாளரை ஓசியா தீர்க்கதரிசி என்று அடையாளப்படுத்துகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கும் உலகத்துக்கும் அவர் அளித்த தீர்க்கதரிசன செய்திகளைப் பற்றிய ஓசியா தனிப்பட்ட கணக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசியா இஸ்ரேலின் ஒரே தீர்க்கதரிசியாகும், அவருடைய வாழ்க்கையின் பிற்காலங்களில் பதிவு செய்யப்பட்டதும் நமக்கு கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களுமாகும்.

எழுதப்பட்ட காலம்: பெயேரியின் குமாரனாகிய ஓசியா கி.மு. 785 முதல் கி.மு. 725 வரையிலுள்ள காலக்கட்டத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஓசியாவின் புத்தகம் கி.மு. 755 முதல் 725 கி.மு. வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: நம்முடைய தேவன் ஒரு அன்பான தேவன் என்பதை இஸ்ரவேலர்களுக்கும் நமக்கும் நினைவூட்டுவதற்காக ஓசியா இந்த புத்தகத்தை எழுதினார் – அதாவது அவருடைய உடன்படிக்கை ஜனங்களுக்கு அவர் அளித்த வாக்கு நிலையானது. இஸ்ரவேல் தொடர்ந்து பொய்யான தெய்வங்களுக்கு நேராகத் திரும்பினாலும், தேவனுடைய உறுதியான அன்பு விசுவாசமற்ற மனைவியின் மீதுள்ள கணவனின் நீடித்த அன்பினால் சித்தரிக்கப்படுகிறது. தேவனுடைய அன்பிற்கு தங்கள் முதுகைத் திருப்பிக் காண்பிப்பவர்களுக்கு ஓசியாவின் செய்தி ஒரு எச்சரிக்கையாகும். ஓசியா மற்றும் கோமேரின் திருமண உறவின் அடையாள விளக்கக்காட்சியின் மூலம், தேவனைவிட்டுப் பிரிந்து விக்கிரகாராதனை செய்யும் இஸ்ரவேல் தேசத்தின் மீதான தேவனுடைய அன்பானது, பாவம், நியாயத்தீர்ப்பு மற்றும் மன்னிக்கும் அன்பு ஆகிய கருப்பொருள்களில் ஒரு வளமான உருவகத்தில் காட்டப்படுகிறது.

திறவுகோல் வசனங்கள்: ஓசியா 1:2, “கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.”

ஓசியா 2:23, “நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.”

ஓசியா 6:6, “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.”

ஓசியா 14:2-4, “வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.”

சுருக்கமான திரட்டு: ஓசியாவின் புத்தகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (1) ஓசியா 1:1-3:5 வரையிலுள்ள பகுதியில், விபச்சாரம் செய்கிற மனைவியையும் உண்மையுள்ள அவளது கணவனையும் விவரிக்கிறது, இது விக்கிரகாராதனை மூலம் தேவனை விட்டு விலகி இஸ்ரவேல் செய்த துரோகத்தின் அடையாளமாகும், மற்றும் (2) ஓசியா 3:6-14:9 வரையிலுள்ள பகுதியில், இஸ்ரவேலின், குறிப்பாக சமாரியாவின், சிலைகளை வழிபடுவதற்கும், இறுதியில் மீட்டெடுப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கிறது.

புத்தகத்தின் முதல் பகுதியில் மூன்று தனித்துவமான கவிதைகள் உள்ளன, தேவனுடைய பிள்ளைகள் விக்கிரகாராதனைக்கு காலத்திற்கு காலம் எப்படி திரும்பிச் சென்றார்கள் என்பதை விளக்குகிறது. கோமேரை திருமணம் செய்ய தேவன் ஓசியாவிடம் கட்டளையிடுகிறார், ஆனால் அவள் அவனுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்ற பிறகு, ஓசியாவைவிட்டுப் பிரிந்து தன் காதலர்களிடம்/காமுகர்களிடம் செல்கிறாள். முதல் அதிகாரத்தில் இந்த அடையாள குறியீட்டு முக்கியத்துவத்தை தெளிவாகக் காணலாம்,அதாவது ஓசியா இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு திருமண பந்தத்திலிருந்து வழிவிலகி ஒரு விபச்சாரியாக மாற்றுவதோடு ஒப்பிடுகிறார். இரண்டாவது பிரிவில் ஓசியா இஸ்ரவேலரைக் கண்டிக்கிறார், ஆனால் அதைத் தொடர்ந்து வாக்குறுதிகள் மற்றும் தேவனுடைய இரக்கங்களும் அருளப்படுகின்றன.

ஓசியாவின் புத்தகம் தேவனுடையப் பிள்ளைகளின் மேல் இடைவிடாத தேவனின் அன்பினைக் குறித்த தீர்க்கதரிசன கணக்கு விவரமாகும். காலத்தின் தொடக்கத்திலிருந்தே தேவனுடைய நன்றியற்ற மற்றும் தகுதியற்ற படைப்பானது அவருடைய அன்பு, அருள் மற்றும் இரக்கம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டாலும், அதன் துன்மார்க்கத்திலிருந்து விலகி இருக்க முடியவில்லை.

ஓசியாவின் கடைசி பகுதி, மனந்திரும்பிய இருதயத்தோடு அவரிடம் திரும்பிச் செல்லும்போது தேவனுடைய அன்பு அவருடைய பிள்ளைகளை எவ்வாறு மீட்கிறது என்பதைக் காட்டுகிறது. ஓசியாவின் தீர்க்கதரிசன செய்தி எதிர்காலத்தில் அதாவது 700 ஆண்டுகளுக்குப்பிறகு வரவிருக்கிற இஸ்ரவேலின் மேசியாவினுடைய வருகையை முன்னறிவிக்கிறது. புதிய ஏற்பாட்டில் ஓசியாவின் புத்தகம் பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிறது.

முன்னிழல்கள்: ஓசியா 2:23-ல், புறஜாதியாரை [யூதரல்லாதவர்களை] அவருடைய பிள்ளைகளாக சேர்க்கும்படி தேவனிடமிருந்து வந்த அற்புதமான தீர்க்கதரிசன செய்தியை கொண்டுள்ளது, ரோமர் 9:25 மற்றும் 1 பேதுரு 2:10 ஆகியவற்றிலும் இந்த செய்தியானது பதிவு செய்யப்பட்டுள்ளது. புறஜாதியார் முதலில் “தேவனுடைய ஜனங்கள்” அல்ல, ஆனால் அவருடைய இரக்கம் மற்றும் கிருபையின் மூலம் அவர் இயேசு கிறிஸ்துவை ஈவாக வழங்கியுள்ளார், அவர்மீதுள்ள விசுவாசத்தினால் நாம் அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலர்களின் மரத்தில் ஒட்டப்படுகிறோம் (ரோமர் 11:11-18). இது திருச்சபையைப் பற்றிய ஒரு அற்புதமான உண்மை, இது "இரகசியம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் கிறிஸ்துவுக்கு முன்பு, தேவனுடைய ஜனங்கள் யூதர்களாக மட்டுமே கருதப்பட்டனர். கிறிஸ்து வந்தபோது, "புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்” (ரோமர் 11:25) என்று வாசிக்கிறோம்.

நடைமுறை பயன்பாடு: ஓசியா புத்தகம் தேவனுடைய ஜனங்கள் மீதுள்ள அவரது நிபந்தனையற்ற அன்பை உறுதிப்படுத்துகிறது. ஆனால், தேவன் தனது பிள்ளைகளின் செயல்களால் எவ்வாறு அவமதிக்கப்படுகிறார், கோபப்படுகிறார் என்பதற்கான ஒரு சித்திரமாகவும் இது இருக்கிறது. அளவில்லா அன்பும், இரக்கமும், கிருபையும் பெற்றுக்கொண்ட ஒரு பிள்ளை தனது தந்தையை இவ்வளவு அவமதிப்புடன் எப்படி நடத்த முடியும்? ஆனாலும், பல நூற்றாண்டுகளாக நாம் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இஸ்ரவேலர்கள் எவ்வாறு தேவனுக்கு தங்கள் முதுகை திருப்பி காண்பித்தார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது, அதே இஸ்ரவேலரின் பிரதிபலிப்பைக் காண நமக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியைத் தவிர வேறு எதையும் நாம் பார்க்க வேண்டியதில்லை.

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்வதன் மூலம் மட்டுமே, நாம் தகுதியான நரகத்திற்குப் பதிலாக மகிமையில் நித்திய ஜீவனைக் கொடுக்கக்கூடியவரை நிராகரிப்பதைத் தவிர்க்க முடியும். நம்முடைய சிருஷ்டிகரை மதிக்க நாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். நாம் தவறு செய்யும் போது, துக்கப்படுகிற இருதயமும் மனந்திரும்புதலின் வாக்குறுதியும் இருந்தால், தேவன் மீண்டும் நமக்கு ஒருபோதும் அழியாத நிலையான அன்பைக் காண்பிப்பார் என்று ஓசியாவின் புத்தகம் நமக்குக் காண்பிக்கிறது (1 யோவான் 1:9).

English


முகப்பு பக்கம்
ஓசியா புத்தகம்