settings icon
share icon

எபிரேயருக்கு எழுதின நிருபம்

எழுத்தாளர்: அப்போஸ்தலனாகிய பவுலின் எழுத்துக்களில் எபிரெயர் புத்தகத்தை சிலர் உள்ளடக்கியிருந்தாலும், எழுத்தாளர் யார் என்பதைக் குறித்து குறிப்பாக அடையாளம் கண்டுகொள்வதென்பது ஒரு புதிராகவே உள்ளது. பவுலின் வழக்கமான வழ்த்துரையானது அவரது மற்ற அனைத்து எழுத்துக்களுக்கும் பொதுவானதாகும், அது இந்த நிருபத்தில் காணாமல்போய்விட்டது. கூடுதலாக, இந்த நிருபத்தின் எழுத்தாளர் கிறிஸ்து இயேசுவின் உண்மையான நேரில் கண்ட சாட்சிகளாக இருந்த மற்றவர்கள் வழங்கிய அறிவு மற்றும் தகவல்களை நம்பியிருந்தார் என்கிற கருத்து (2:3) பவுலின் எழுத்துக்கள் தான் இந்த நிருபம் என்பது மேலும் சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது. சிலர் லூக்காவை இதன் எழுத்தாளர் என்று கூறுகிறார்கள்; மற்றவர்கள் இந்த நிருபமானது அப்பொல்லோ, பர்னபா, சீலா, பிலிப்பு அல்லது ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா எழுதியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். பேனாவைப் பிடித்த மனித கையைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் எல்லா வேதவாக்கியங்களையும் எழுதிய தெய்வீக எழுத்தாளர் என்கிற நிலையில் இருக்கிறார் (2 தீமோத்தேயு 3:16); ஆகையால், வேதாகமத்தின் மற்ற அறுபத்தைந்து புத்தகங்களைப் போலவே இந்த நிருபமும் அதே நியமன அதிகாரத்துடன் பேசுகிறது.

எழுதப்பட்ட காலம்: ஆரம்பகால திர்ச்ச்சபையின் பிதாக்களில் ஒருவராகிய கிளெமென்ட் என்பவர் கி.பி 95-ல் எபிரெயர் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். எனினும், நிருபம் எழுதப்பட்ட நேரத்தில் தீமோத்தேயு உயிருடன் இருந்தார் என்பதும், பழைய ஏற்பாட்டின் ஆசாரிய முறைமைகளின் முடிவைக் காட்டும் கி.பி. 70-ல் எருசலேமின் அழிவுடன் ஏற்பட்ட எந்த ஆதாரமும் இல்லாதது போன்ற உள்ளான சான்றுகள், இந்த நிருபமானது கி.பி. 65-ல் புத்தகம் எழுதப்பட்டதைக் குறிக்கிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: கிறிஸ்தவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிறந்த விற்பனையான புத்தகமான கிங்டம் ஆஃப் தி கல்ட்ஸ் (Kingdom of the Cults) என்னும் புத்தகத்தின் எழுத்தாளர் மறைந்த டாக்டர் வால்டர் மார்ட்டின் தனது வழக்கமான எதுகை மோனை சொல்லாற்றலில் இந்த நிருபத்தை விவரித்தார், அதாவது எபிரேயர் புத்தகம் எபிரேயனால் பிற எபிரேயர்கள் எபிரேயர்களைப் போல நடந்துகொள்ளுவதை நிறுத்தும்படி எபிரேயர்களுக்கு எழுதப்பட்டது என்று விவரித்தார். உண்மையில், ஆரம்பகால யூத விசுவாசிகளில் பலர் பெருகிவரும் உபத்திரவம் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிப்பதற்காக யூத மதத்தின் ஆசரிப்புகள் மற்றும் சடங்குகளில் மீண்டும் நழுவிக் கொண்டிருந்தார்கள். இந்த நிருபம், உபத்திரவப்படுத்தப்பட்ட விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவின் கிருபையில் தொடர அறிவுறுத்துகிறது.

திறவுகோல் வசனங்கள்: எபிரெயர் 1:1-2, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.”

எபிரெயர் 2:4, “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.”

எபிரெயர் 4:14-16, “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”

எபிரெயர் 11:1, “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.”

எபிரெயர் 12:1-2, “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”

சுருக்கமான திரட்டு: எபிரேயருக்கு எழுதின நிருபம் மூன்று தனித்தனி குழுக்களை மையைப்படுத்தி உரையாற்றுகிறது: முதலாவதாக கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், இரண்டாவதாக அறிவைக் கொண்ட மற்றும் கிறிஸ்துவின் உண்மைகளை அறிவார்ந்த முறையில் ஏற்றுக்கொண்ட அவிசுவாசிகள், இறுதியாக கிறிஸ்துவிடமாக ஈர்க்கப்பட்ட அவிசுவாசிகள், ஆனால் முடிவில் அவர்கள் அவரை நிராகரித்தவர்கள். இந்த மூன்று குழுக்களில் எந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு எந்த செய்தியானது உரையாற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மற்ற வேதவசனங்களுடன் பொருந்தாத முடிவுகளை அல்லது அர்த்தங்களை எடுக்க நேரிடும்.

எபிரேயர் நிருபத்தின் எழுத்தாளர் கிறிஸ்துவின் மேலாலான தன்மை மற்றும் நிலையை அவரது ஊழியப் பணிகள் மற்றும் நபரில் தொடர்ந்து குறிப்பிட்டு விளக்குகிறார். பழைய ஏற்பாட்டின் எழுத்துக்களில், யூத மதத்தின் சடங்குகள் மற்றும் ஆசரிப்புகள் மேசியாவின் வருகையை அடையாளமாக சுட்டிக்காட்டுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூத மதத்தின் சடங்குகள் அனைத்து ஆசரிப்பு முறைமைகளும் இனி வரவிருக்கும் விஷயங்களின் நிழல்கள் மட்டுமே. வெறும் மதம் வழங்கும் எதையும் விட கிறிஸ்து இயேசு சிறந்தவர் என்று எபிரேயர் புத்தகம் சொல்லுகிறது. கிறிஸ்து இயேசுவின் நபர், வேலை மற்றும் ஊழியத்துடன் ஒப்பிடுகையில் மதத்தின் அனைத்து ஆடம்பரங்களும் சூழ்நிலைகளும் மங்கலாகிப்போகின்றன. ஆகவே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மேலான நிலை மற்றும் தன்மையே இந்த சொற்பொழிவாக எழுதப்பட்ட நிருபத்தின் கருப்பொருளாக இருக்கிறது.

இணைப்புகள்: எபிரெயர் புத்தகமானது பழைய ஏற்பாட்டைக் குறித்து கவனம் செலுத்துவதுபோல புதிய ஏற்பாட்டில் வேறு எங்கும் எந்த புத்தகமும் அதிக கவனம் செலுத்தவில்லை, அதன் அடித்தளமாக லேவியர்களின் ஆசாரியத்துவம் உள்ளது. எபிரேயர் நிருபத்தின் எழுத்தாளர் பழைய ஏற்பாட்டின் பலி முறைமையின் போதாமைகளை கிறிஸ்துவில் முழுமையுடனும் பரிபூரண நிறைவுடனும் தொடர்ந்து ஒப்பிடுகிறார். பழைய உடன்படிக்கைக்கு உட்பட்டு ஒரு மனித ஆசாரியனால் வழங்கப்படும் / ஏறெடுக்கப்படும் பாவத்திற்கான தொடர்ச்சியான பலிகளும் வருடத்திற்கு ஒரு முறை செலுத்தப்படும் பாவநிவாரணமும் தேவைப்படுமானால், புதிய உடன்படிக்கை கிறிஸ்துவின் மூலமாக அனைவருக்கும் ஒரேஒரு முறை மட்டும் பலியை வழங்குகிறது (எபிரெயர் 10:10) மற்றும் தேவனுடைய கிருபாசனத்திற்கு நேரடி அணுகல் அவரிடத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்தது.

நடைமுறை பயன்பாடு: அடித்தள கிறிஸ்தவ கோட்பாட்டில் மேலான உபதேசங்களைக் கொண்ட எபிரேயருக்கு எழுதின நிருபம், தேவனுடைய "விசுவாச வீரர்களின் / வீராங்கனைகளின்" ஆறுதலளிக்கும் எடுத்துக்காட்டுகளையும் நமக்குத் தருகிறது, அவர்கள் பெரும் சிரமங்கள், பாடுகள் மற்றும் பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் தேவனுக்காக விசுவாசமாக இருந்தனர் (எபிரெயர் 11). தேவனுடைய விசுவாச மண்டபத்திலுள்ள இந்த உறுப்பினர்கள் தேவனுடைய நிபந்தனையற்ற உறுதி மற்றும் முழுமையான நம்பகத்தன்மைக்கு ஏராளமான ஆதாரங்களை வழங்குகிறார்கள். அதேபோல், நம்முடைய பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் தேவனுடைய செயற்பாடுகளின் உறுதியான விசுவாசத்தை தியானிப்பதன் மூலம், நம்முடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வளமான வாக்குறுதிகள் மீது நாம் நம்முடைய முழுமையான நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

எபிரேயருக்கு எழுதின நிருபத்தின் எழுத்தாளர் விசுவாசிகளுக்கு ஏராளமான ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்கிறார், ஆனால் நாம் கவனிக்க வேண்டிய ஐந்து பவித்திரமான எச்சரிக்கைகள் உள்ளன. புறக்கணிப்பின் ஆபத்து (எபிரெயர் 2: 1-4), அவநம்பிக்கையின் ஆபத்து (எபிரெயர் 3:7–4: 13), ஆவிக்குரிய முதிர்ச்சியில்லாமையின் ஆபத்து (எபிரெயர் 5:11–6: 20), தொடர்ந்து சகித்துக்கொள்ளாமல் தோல்வியடையும் ஆபத்து (எபிரெயர் 10:26-39), தேவனை மறுப்பதன் உள்ளார்ந்த ஆபத்து (எபிரெயர் 12: 25-29) ஆகிய எச்சரிக்கைகள் உள்ளன. ஆகவே, இந்த முடிசூட்டப்பட்ட தலைசிறந்த இலக்கியப் படைப்பில் ஒரு சிறந்த கோட்பாடு, புத்துணர்ச்சியூட்டும் ஊக்கமளிக்கும் வசந்தம், மற்றும் நம்முடைய கிறிஸ்தவ நடைப்பயணத்தில் சோம்பலுக்கு எதிராகயுள்ள அறைகூவல், நடைமுறை எச்சரிக்கைகள் ஆகியவற்றைக் காணலாம். ஆனால் இன்னும் பல உள்ளன, ஏனென்றால் எபிரேயர் புத்தகத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புதமான சித்திரத்தை நாம் காண்கிறோம் - நம்முடைய பெரிதான இரட்சிப்பினைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார் (எபிரெயர் 12:2).

English



முகப்பு பக்கம்

எபிரேயருக்கு எழுதின நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries