settings icon
share icon

ஆகாய் புத்தகம்

எழுத்தாளர்: ஆகாய் 1:1, ஆகாய் புத்தகத்தின் எழுத்தாளரை, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் உண்டாகி என்று கூறுவதன் மூலம் அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: ஆகாய் புத்தகம் சுமார் கி.மு. 520 ஆண்டு காலளவில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: ஆகாய் தேவனுடைய மக்களுக்கு அவர்களின் முன்னுரிமைகள் குறித்து சவால் விடுக்க முயன்றவராவார். உள்ளூர் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்ப்பையும் மீறி ஆலயத்தைக் கட்டுவதன் மூலம் தேவனைப் பயபக்தியுடன் மகிமைப்படுத்த அவர் அவர்களை அழைத்தார். இந்த ஆலயம் சாலமோனின் அலங்காரமாக கட்டப்பட்டதுபோல அலங்கரிக்கப்படாது என்பதால் ஆகாய் அவர்களை சோர்வடைய வேண்டாம் என்று அழைத்தார். அவர்களுடைய வழிகளின் அசுத்தத்திலிருந்து விலகி, தேவனுடைய இறையாண்மை சக்தியை நம்பும்படி அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் தேவனுடைய ஜனம் எதிர்கொண்ட பிரச்சினைகள், ஜனங்கள் எவ்வாறு தைரியமாக தேவன்மீது நம்பிக்கை வைத்தார்கள், தேவன் அவர்களின் தேவைகளுக்கு எவ்வாறு வழங்கினார் என்பதை நினைவூட்டுவதே ஆகாய் புத்தகத்தின் நோக்கமாகும்.

திறவுகோல் வசனங்கள்: ஆகாய் 1:4, “இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?”

ஆகாய் 1:5-6, “இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.”

ஆகாய் 2:9, “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.”

சுருக்கமான திரட்டு: தேவனுடைய ஜனங்கள் தங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்து, தைரியம் கொண்டு, தேவனுடைய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயல்படுவார்களா? தம்முடைய வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி மக்களை எச்சரிக்க தேவன் முயன்றார். தேவன் அவர்களை எச்சரித்தது மட்டுமல்லாமல், தம்மைப் பின்பற்றும்படி அவர்களை ஊக்குவிப்பதற்காக அவர் தம் ஊழியர் ஆகாய் மூலமாகவும் வாக்குறுதிகளை அளித்தார். தேவனுடைய மக்கள் தங்கள் முன்னுரிமைகளை மாற்றியமைத்து, தங்கள் வாழ்க்கையில் தேவனை முதலிடத்தில் வைக்கத் தவறியதால், யூதா பாபிலோனிய தேசத்திற்கு சிறைப்படுத்தப்பட்டு போனது. தானியேலின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், தேவனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும், நாடுகடத்தப்பட்ட யூதர்களை மீண்டும் எருசலேமுக்கு செல்ல அனுமதிக்கும்படி தேவன் பெர்சிய ராஜாவான கோரேஸை வழிநடத்தினார். யூதர்களின் ஒரு குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் தேசத்திற்குத் திரும்பி, தேவனுக்கு தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து, அவரை வணங்கி, பாலஸ்தீனத்தில் வாழ்ந்த உள்ளூர் மக்களின் உதவியின்றி எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினர். அவர்களின் தைரியமான நம்பிக்கை சுமார் 15 ஆண்டுகளாக உள்ளூர் மக்களிடமிருந்தும் பெர்சிய அரசாங்கத்திலிருந்தும் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

முன்னிழல்கள்: சிறிய தீர்க்கதரிசிகளின் பெரும்பாலான புத்தகங்களைப் போலவே, ஆகாய் புத்தகம் மறுசீரமைப்பு மற்றும் ஆசீர்வாத வாக்குறுதிகளுடன் முடிவடைகிறது. கடைசி வசனமான ஆகாய் 2:23-ல், "என் ஊழியக்காரன்" என்று செருபாபேலைக் குறிக்க தேவன் ஒரு தெளிவான மேசியாவின் தலைப்பைப் பயன்படுத்துகிறார் (2 சாமுவேல் 3:18; 1 ராஜா. 11:34; ஏசாயா 42:1–9; எசேக்கியேல் 37:24, 25). ஆகாய் மூலம், தேவன் அவரை ஒரு முத்திரை மோதிரம் போல ஆக்குவார் என்று உறுதியளிக்கிறார், இது கனம், அதிகாரம் மற்றும் வல்லமையின் அடையாளமாக இருந்தது, கடிதங்கள் மற்றும் கட்டளைகளை முத்திரையிட பயன்படுத்தப்படும் ஒரு ராஜாவின் செங்கோல் போன்றது. தேவனுடைய முத்திர வளையமாக, செருபாபேல், தாவீதின் வீட்டைக் குறிக்கிறது மற்றும் நாடுகடத்தப்பட்டதால் இடையூறுக்குள்ளான மேசியாவின் வம்சாவளியை மீண்டும் தொடங்குகிறது. கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சியில் உச்சக்கட்டத்தை அடையும் தாவீதின் வழியில் வந்த ராஜாக்களின் வரிசையை செருபாபேல் மீண்டும் நிறுவினார். யோசேப்பின் பக்கத்திலும் (மத் 1:12) மரியாளின் பக்கத்திலும் (லூக்கா 3:27) என கிறிஸ்துவின் வரிசையில் செருபாபேல் தோன்றுகிறார்.

நடைமுறை பயன்பாடு: ஆகாய் புத்தகம் இன்றும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. ஆகாய் நம்மிடம் கேட்கிறார்: 1) தேவனுடைய வேலையைச் செய்வதை விட நம்முடைய சொந்த இன்பங்களில் நாம் அதிக அக்கறை கொண்டிருக்கிறோமா என்று பார்த்து நமது முன்னுரிமைகளை ஆராயவேண்டும்; 2) நாம் எதிர்ப்பில் ஈடுபடும்போது அல்லது சூழ்நிலைகளை ஊக்கப்படுத்தும் போது தோல்வியுற்ற அணுகுமுறையை நிராகரிக்க வேண்டும்; 3) நம்முடைய தோல்விகளை ஒப்புக்கொண்டு, தேவனுக்கு முன்பாக பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முற்படவேண்டும்; 4) தேவனுக்காக தைரியமாக செயல்படவேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நம்முடைய சூழ்நிலைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார் என்ற உறுதி நமக்கு இருக்கிறது; மற்றும் 5) நாம் அவரை உண்மையாக சேவிக்கும்போது அவர் நம்மை தாராளமாக ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்து தேவனுடைய கைகளில் பாதுகாப்பாக சார்ந்து/சாய்ந்து கொள்ளவேண்டும்.

Englishமுகப்பு பக்கம்

ஆகாய் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries