settings icon
share icon

கலாத்தியருக்கு எழுதின நிருபம்

எழுத்தாளர்: கலாத்தியர் 1:1-வது வசனம் அப்போஸ்தலனாகிய பவுலை கலாத்தியருக்கு எழுதின நிருபத்தின் எழுத்தாளராக தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

எழுதப்பட்ட காலம்: கலாத்தியருக்கு எழுதின நிருபம் சரியாக எங்கு அனுப்பப்பட்டது என்பதையும், எந்த மிஷனரி பயணத்தின் போது பவுல் அந்த பகுதியில் திருச்சபைகளை ஸ்தாபித்தார் என்பதையும் பொறுத்து, கலாத்தியருக்கு எழுதின நிருபம் கி.பி. 48 முதல் கி.பி. 55 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: கலாத்தியாவில் உள்ள திருச்சபைகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்த யூதர்கள் மற்றும் புறஜாதியினரை கொண்டிருந்தது. பவுல் தனது அப்போஸ்தல குணத்தையும், அவர் கற்பித்த கோட்பாடுகளையும் வலியுறுத்துகிறார், அவர் கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தில் கலாத்திய திருச்சபைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், குறிப்பாக விசுவாசத்தால் மட்டுமே நீதிமானாக்கப்பட முடியும் என்பதான முக்கியமான கருத்தை வலியுறுத்தினார். ஆகவே இந்த பொருள் முக்கியமாக ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் விவாதிக்கப்பட்டதைப் போன்றது, அதாவது விசுவாசத்தால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த நிருபத்தில் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் மனிதர்கள் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சமகால வரலாறு அடங்கிய ஒரு கட்டுரையாக இந்த கலாத்தியர் நிருபம் எழுதப்படவில்லை. இது கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அசூசிப்படுத்துதலுக்கு எதிரான போராட்டமாகும். நியாயப்பிரமாணத்தின் செயல்களால் அல்லாமல் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுவதற்கான அத்தியாவசிய சத்தியத்தை யூதர்கள் புறக்கணித்து, தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கிறிஸ்தவ விசுவாசிகள் நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த போதனை கலாத்திய திருச்சபைகளில் ஊடுருவத் தொடங்கியிருப்பதாகவும், அது அவர்களின் சுதந்திரத்தின் பாரம்பரியத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தியதாகவும் பவுல் அறிந்தபோது, இந்த நிருபத்தில் உள்ள உணர்ச்சிமிக்க மறுபரிசீலனை ஒன்றை எழுதினார்.

திறவுகோல் வசனங்கள்: கலாத்தியர் 2:16, “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.”

கலாத்தியர் 2:20, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”

கலாத்தியர் 3:11, “நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.”

கலாத்தியர் 4:5-6, “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.”

கலாத்தியர் 5:22-23, “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”

கலாத்தியர் 6:7, “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”

சுருக்கமான திரட்டு: விசுவாசத்தின் மூலம் கிருபையால் நீதிமானாக்கப்பட்டதன் விளைவாக ஆவிக்குரிய சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பவுல் கலாத்தியரை அவர்களது கிறிஸ்தவ சுதந்திரத்தில் நிலைத்து நிற்கும்படிக்கு வேண்டுகோள் விடுத்தார், மேலும் "அவர்களை மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல் (அதாவது மோசேயின் நியாயப்பிரமாணம்), கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்" (கலாத்தியர் 5:1) என்று கூறினார். கிறிஸ்தவ சுதந்திரம் என்பது ஒருவரின் தாழ்ந்த தன்மையைப் உயர்த்திக் காண்பித்து அதனால் திருப்தி அடைந்துகொள்வது அல்ல; மாறாக, இது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும் (கலாத்தியர் 5:13; 6:7-10). இத்தகைய சுதந்திரம் ஒருவரை அவரது வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து இரட்சிக்காது. உண்மையில், அது ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான போரை தீவிரப்படுத்தக்கூடும். ஆயினும், மாம்சமானது (கீழான சுபாவம்) கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டுள்ளது (கலாத்தியர் 2:20); அதன் விளைவாக, ஆவியானவர் விசுவாசியின் வாழ்க்கையில் அன்பு, சந்தோஷம், மற்றும் சமாதானம் போன்ற ஆவியின் கனியதைத் தரும்படிச் செய்வார் (கலாத்தியர் 5:22-23).

கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபம் ஈர்க்கப்பட்ட கிளர்ச்சியின் உந்துதலால் எழுதப்பட்டது. பவுலைப் பொறுத்தமட்டில், ஒரு நபர் விருத்தசேதனம் செய்யப்பட்டாரா என்பது அல்ல, ஆனால் அவர் "ஒரு புதிய சிருஷ்டி" ஆகிவிட்டாரா என்பதுதான் (கலாத்தியர் 6:15) முக்கியமான காரியமாகும். விசுவாசத்தால் மட்டுமே நீதிமானாக்கப்படுவதற்கான விவாதத்தில் பவுல் வெற்றிபெறவில்லை என்றால், கிறிஸ்தவ மதம் உலகளாவிய இரட்சிப்பின் வழியாக இருப்பதற்குப் பதிலாக யூத மதத்திற்குள் ஒரு பிரிவாகவே இருந்திருக்கும். ஆகவே, கலாத்தியருக்கு எழுதப்பட்ட நிருபம் லூத்தரின் நிருபம் மட்டுமல்ல; பவுலுடன் அறிக்கைசெய்யும் ஒவ்வொரு விசுவாசியின் நிருபமும் இதுதான்: "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலாத்தியர் 2:20).

கிறிஸ்தவத்தின் இரண்டு அம்சங்களை யாக்கோபு மற்றும் கலாத்தியர் புத்தகங்கள் விளக்குகின்றன, ஆரம்பத்தில் இருந்தே அவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தெரிகின்றன, ஆனால் அவை உண்மையில் ஒன்றுக்கொன்று துணை நிற்கின்றன. கிறிஸ்துவின் நன்நெறிமுறையை யாக்கோபு வலியுறுத்துகிறார், விசுவாசமானது அதன் பலன்களால் அதனுடைய இருப்பை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ஆயினும், யாக்கோபு, பவுலுக்கு எந்த விதத்திலும் குறையாமல், தேவனுடைய கிருபையால் தான் தனிநபரின் மனமாற்றம் என்கிற அவசியத்தை வலியுறுத்துகிறார் (யாக்கோபு 1:18). மறுபுறம் நன்நெறிமுறையை உருவாக்கும் நற்செய்தியின் ஆற்றலை கலாத்தியர் நிருபம் வலியுறுத்துகிறது (கலாத்தியர் 3:13-14). நன்நெறிமுறை வாழ்க்கையைப் பற்றி பவுல் யாக்கோபை விடக் குறைவாக அக்கறை காட்டவில்லை (கலாத்தியர் 5:13). ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே, கிறிஸ்தவ சத்தியத்தின் இந்த இரண்டு அம்சங்களும் எப்போதும் ஒன்றுக்கொன்று நிகராக துல்லியமாக இருக்க வேண்டும்.

இணைப்புகள்: கலாத்தியருக்கு பவுல் எழுதிய இந்த நிருபம் முழுவதும், கிருபையால் இரட்சிக்கப்டுதல் – அது தேவனுடைய ஈவு – அது இரட்சிக்க இயலாத மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமானாக்கப்படுத்துதலுக்கான ஆதாரமாக மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு திரும்பும் யூதர்கள், ஆரம்பகால திருச்சபையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், பேதுரு போன்ற ஒரு முக்கிய கிறிஸ்தவரை தற்காலிகமாக தங்கள் வஞ்சக வலையில் இவர்கள் இழுக்கிறார்கள் (கலாத்தியர் 2:11-13). கிருபையினாலே உண்டாகும் இரட்சிப்புக்கும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை பவுல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அளவிற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்துடன் இணைந்திருந்தனர். நியாயப்பிரமாணத்தைச் சுற்றியுள்ள பழைய ஏற்பாட்டு மையத்துடன் கலாத்தியர் நிருபத்தை இணைக்கும் கருப்பொருள்கள்: கிருபை vs நியாயப்பிரமாணம்: நீதிமானாக்கமுடியாத நியாயப்பிரமாணம் (2:16); விசுவாசி நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவராக இருக்கிறார் (2:19); விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாக்கப்படுகிறார் (3:6); நியாயப்பிரமாணம் இரட்சிப்பைக் கொண்டுவருவதில்லை, ஆனால் தேவனுடைய கோபத்தை அது கொண்டுவருகிறதாய் இருந்தது (3:10); அன்பு, கிரியை அல்ல, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது (5:14).

நடைமுறை பயன்பாடு: கலாத்தியர் புத்தகத்தின் முக்கிய கருப்பொருளில் ஒன்று 3:11-ல் காணப்படுகிறது: “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவது மட்டுமல்ல (யோவான் 3:16; எபேசியர் 2:8-9), ஆனால் கிறிஸ்துவை விசுவாசிப்பவரின் வாழ்க்கை - நாளுக்கு நாள், ஒவ்வொரு கணமும் - அந்த விசுவாசத்தினாலும் அதன் மூலமும் வாழ்கிறது. விசுவாசம் என்பது நாம் சொந்தமாகக் கற்பனை செய்யும் ஒன்று அல்ல – அது தேவனுடைய ஈவாக இருக்கிறது, கிரியைகளால் அல்ல - ஆனால் (1) நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவது நம்முடைய பொறுப்பும் மகிழ்ச்சியும் ஆகும், இதனால் மற்றவர்கள் கிறிஸ்துவின் வேலையை நம்மில் காண்பார்கள், (2) ஆவிக்குரிய நடைமுறை செயல்பாடுகளைக் (அதாவது வேத வாசிப்பு, ஜெபம், கீழ்ப்படிதல்) கையாண்டு அதன் மூலம் நம் நம்பிக்கையை மென்மேலும் அதிகரிக்கும்படிச் செய்யலாம்.

நம்முடைய வாழ்க்கையின் கனிகளால் நாம் அறியப்படுவோம் என்று இயேசு சொன்னார் (மத்தேயு 7:16), இது நமக்குள் இருக்கும் நம்பிக்கையின் சான்றுகளைத் தருகிறது. எல்லா கிறிஸ்தவர்களும் தங்களுக்குள் இருக்கும் இரட்சிப்பின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும், இதனால் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு முன்பாக பிரதிபலிக்கும் நம் வாழ்க்கை அவர்கள் நம்மில் காணும்படிச் செய்யும், மேலும் அது “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்” (மத்தேயு 5:16).

Englishமுகப்பு பக்கம்

கலாத்தியருக்கு எழுதின நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries