settings icon
share icon

உபாகமம் புத்தகம்

எழுத்தாளர்: மோசே உபாகமம் புத்தகத்தை எழுதினார், இது உண்மையில் இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடப்பதற்கு சற்று முன்பு இஸ்ரவேலர்களுக்கு அவர் ஆற்றிய பிரசங்கங்களின் தொகுப்பாகும். “மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன” (1:2). வேறு யாரோ ஒருவர் (ஒருவேளை யோசுவாவாக இருக்கலாம்) இந்த புத்தகத்தின் கடைசி அதிகாரத்தை எழுதியிருக்கலாம்.

எழுதப்பட்ட காலம்: இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு 40 நாட்களுக்கு முன்னர் இந்த பிரசங்கங்கள் மோசேயினால் வழங்கப்பட்டன. முதல் பிரசங்கம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே (1:4) வழங்கப்பட்டது, இஸ்ரவேலர்கள் 70 நாட்களுக்குப் பிறகு, முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள் (யோசுவா 4:19). மோசேயின் மரணத்திற்குப் பிறகு 30 நாட்கள் துக்கத்தை ஆசரித்ததை கழித்தால் (உபாகமம் 34:8), நமக்கு மீதமுள்ளது 40 நாட்கள். ஆக, இந்த புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு கி.மு. 1410.

எழுதப்பட்டதன் நோக்கம்: புதிய தலைமுறை இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையவிருந்தனர். இந்த கூட்டம் செங்கடலில் நடந்த அதிசயத்தை அனுபவிக்கவில்லை அல்லது சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்தைக் கேட்கவில்லை, மேலும் அவர்கள் பல ஆபத்துகளையும் சோதனையையும் கொண்டு ஒரு புதிய தேசத்திற்குள் நுழையவிருந்தனர். தேவனுடைய நியாயப்பிரமாணம் மற்றும் தேவனுடைய வல்லமை ஆகியவற்றை நினைவூட்டுவதற்காக இந்த உபாகமம் புத்தகம் எழுதப்பட்டது.

திறவுகோல் வசனங்கள்: “நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.” (உபாகமம் 4:2)

“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுங்கள்.” (உபாகமம் 6:4-7)

“அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.” (உபாகமம் 32:46-47)

சுருக்கமான திரட்டு: தேவனுடைய உண்மை, தேவனுடைய பரிசுத்தம், தேவனுடைய ஆசீர்வாதம் மற்றும் தேவனுடைய எச்சரிக்கைகள் ஆகிய நான்கு விஷயங்களை நினைவில் வைக்கவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. முதல் மூன்று அதிகாரங்கள் எகிப்திலிருந்து தாங்கள் தற்போது வந்து சேர்ந்திருக்கிற இடமான மோவாபிற்கு முந்தைய பயணத்தை மீண்டும் ஞாபகம் மூட்டுகின்றன. 4ஆம் அதிகாரம் கீழ்ப்படிதலுக்கான அழைப்பு, அவர்களுக்கு உண்மையுள்ள தேவனுக்கு அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

5 முதல் 26 வரையிலுள்ள அதிகாரங்கள் நியாயப்பிரமாண சட்டத்தை மறுபடியும் எடுத்துகூறல் ஆகும். பத்து கட்டளைகள், பலிகள் மற்றும் விசேஷித்த நாட்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் மீதமுள்ள சட்டம் புதிய தலைமுறைக்கு வழங்கப்படுகின்றன. கீழ்ப்படிவோருக்கு ஆசீர்வாதமும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது (5:29; 6:17-19; 11:13-15), அவரது சட்டத்தை மீறுபவர்களுக்கு பஞ்சம் வாக்குறுதி அளிக்கப்படுகிறது (11:16-17).

ஆசீர்வாதம் மற்றும் சாபம் என்கிற கருப்பொருள் 27-30 வரையிலுள்ள அதிகாரங்களில் தொடர்கிறது. புத்தகத்தின் இந்த பகுதி இஸ்ரவேலர்களுக்கு முன்பாக ஒரு தெளிவான தேர்வோடு முடிவடைகிறது: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்” (30:19) .

கடைசி அதிகாரங்களில், மோசே ஜனங்களை ஊக்குவிக்கிறார்; அவருக்குப் பதிலாக அவருடைய ஸ்தானத்தில் இஸ்ரவேலர்களை நடத்தும்படிக்கு யோசுவாவை நியமிக்கிறார்; ஒரு பாடலும் பதிவுசெய்யப்படுகிறது; இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் இறுதியான ஆசீர்வாதம் அளிக்கப்படுறது. 34-ஆம் அதிகாரம் மோசேயின் மரணத்தின் சூழ்நிலைகளைப் பற்றியது. அவர் பிஸ்கா மலையின்மேல் ஏறினார், அங்கு தேவன் அவனுக்கு அவனால் நுழைய முடியாத வாக்குறுதியளிக்கப்பட்ட கானான் தேசத்தைக் காட்டினார். மோசே தனது 120வது வயதில், ஆனால் நல்ல பார்வை மற்றும் இளமையின் வலிமையுடன், கர்த்தருடைய சந்நிதியில் மரணத்தை தழுவினார். உபாகமம் புத்தகம் இந்த பெரிய தீர்க்கதரிசி பற்றிய ஒரு குறுகிய இரங்கலுடன் முடிகிறது.

முன்னிழல்கள்: உபாகமம் புத்தகத்தில் பல புதிய ஏற்பாட்டு கருப்பொருள்கள் அடங்கியுள்ளன. அவற்றில் முதன்மையானது மோசேயின் நியாயப்பிரமாணத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியமும் அவ்வாறு செய்ய இயலாமலும் இருக்கிற நிலையை குறிப்பிடுகிறது. நியாயப்பிரமாணத்தை தொடர்ந்து மீறிய மக்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்குத் தேவையான முடிவற்ற பலிகள், கிறிஸ்துவின் “அனைவருக்குமுள்ள” இறுதி பலியில் அவற்றின் நிறைவேற்றத்தைக் காண்கிறது (எபிரெயர் 10:10). சிலுவையில் அவர் செய்த பாவப்பரிகார வேலையின் காரணமாக, பாவத்திற்காக நமக்கு மேலும் பலிகள் தேவையில்லை என்பதை காண்பிக்கின்றன.

தேவன் இஸ்ரவேலரைத் தம்முடைய விசேஷித்த மக்களாகத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை அவர் தேர்ந்தெடுப்பதை முன்னறிவிக்கிறது (1 பேதுரு 2:9). உபாகமம் 18:15-19-ல் மோசே மற்றொரு பெரிய தீர்க்கதரிசியைப் பற்றி தீர்க்கதரிசனமாக கூறுகிறார் – இறுதியாக வரும் மேசியாவே அந்த தீர்க்கத்தரிசி. மோசேயைப் போலவே, அவர் தெய்வீக வெளிப்பாட்டைப் பெற்று பிரசங்கிப்பார், மேலும் அவர் தம் மக்களை வழிநடத்துவார் (யோவான் 6:14; 7:40).

நடைமுறை பயன்பாடு: உபாகமம் புத்தகம் தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். நாம் இனி பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிவது இன்னும் ஏற்ற பொறுப்பாக இருக்கிறது. எளிய கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைத் தருகிறது, பாவத்திற்கு அதன் சொந்த விளைவுகள் உண்டு.

நம்மில் யாரும் "நியாயப்பிரமாணத்திற்கு மேலானவர்கள்" அல்ல. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் தீர்க்கதரிசியுமான மோசே கூட கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அவர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாததற்குக் காரணம், அவர் கர்த்தருடைய தெளிவான கட்டளைக்கு கீழ்ப்படியாததுதான் (எண்ணாகமம் 20:13).

வனாந்தரத்தில் இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட காலத்தில், அவர் உபாகமம் புத்தகத்திலிருந்து மூன்று முறையும் மேற்கோள் காட்டினார் (மத்தேயு 4). அவ்வாறு அவர் செய்து, நாம் அவருக்கு எதிராக பாவம் செய்யக்கூடாதபடிக்கு தேவனுடைய வார்த்தையை நம் இருதயங்களில் மறைத்து வைப்பதன் அவசியத்தை இயேசு நமக்கு விளக்கினார் (சங்கீதம் 119:11).

தேவனுடைய உண்மையை இஸ்ரவேலர்கள் நினைவில் வைத்திருப்பதால், நாமும் அவ்வாறு செய்ய வேண்டும். செங்கடலைக் கடந்தது, சீனாய் மலையில் தேவனுடைய பரிசுத்த பிரசன்னம், வனாந்திரத்தில் தேவன் அவர்களுக்கு கொடுத்த மன்னாவின் ஆசீர்வாதம் ஆகியவை நமக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல ஒரு சிறந்த வழி, சிறிது நேரம் எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்த்து, தேவன் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்பதாகும்.

அவருடைய பிள்ளைகளுடனான உறவை விரும்பும் அன்பான தேவனுடைய இருதயம் உபாகமத்தில் ஒரு அழகான சித்திரமாக உள்ளது. இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து “வல்லமையுள்ள கரத்தைக்” கொண்டு அவர்களை மீட்டுக்கொண்டதற்கு அன்பு என்று கர்த்தர் பெயரிடுகிறார் (உபாகமம் 7:7-9). பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, சர்வ வல்லமையுள்ள தேவனால் நேசிக்கப்படுவது எவ்வளவு அற்புதமான விஷயம்!

Englishமுகப்பு பக்கம்

உபாகமம் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries