settings icon
share icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம்

எழுத்தாளர்: அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் அதன் எழுத்தாளரை குறிப்பாக யாரென்று அடையாளம் காண்பிக்கவில்லை. லூக்கா 1:1-4 மற்றும் அப்போஸ்தலர் 1:1-3 ஆகியவற்றிலிருந்து, ஒரே எழுத்தாளர்தான் லூக்கா மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் ஆகிய இரண்டையும் எழுதினார் என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் கூட்டாளியான மருத்துவர் லூக்கா தான் லூக்கா மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் ஆகிய இரண்டையும் எழுதினார் என்பது திருச்சபையின் ஆரம்ப நாட்களிலிருந்து வந்த பாரம்பரியமாகும் (கொலோசெயர் 4:14; 2 தீமோத்தேயு 4:11).

எழுதப்பட்ட காலம்: அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் கி.பி. 61-64 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: ஆரம்பகால திருச்சபையின் வரலாற்றை வழங்குவதற்காக அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் எழுதப்பட்டது. புத்தகத்தின் பிரதான முக்கியத்துவம் பெந்தெகொஸ்தே நாளின் முக்கியத்துவம் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு பயனுள்ள சாட்சிகளாக இருக்க அதிகாரம் பெற்றது ஆகியவைகளாகும். அப்போஸ்தலர்கள் எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சுற்றியுள்ள உலகின் பிற பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருப்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் பதிவு செய்கிறது. நம்முடைய ஆலோசகராக அதிகாரம், வழிகாட்டுதல், கற்பித்தல் மற்றும் சேவை செய்யும் பரிசுத்த ஆவியின் இணையற்ற ஈவை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தைப் படிக்கும்போது, சீஷர்களான பேதுரு, யோவான் மற்றும் பவுல் ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட பல அற்புதங்களால் நாம் அறிவொளி பெறுகிறோம், ஊக்குவிக்கப்படுகிறோம். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தையும், கிறிஸ்துவை அறிந்ததன் விளைவாக ஏற்படும் மாற்றத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் வலியுறுத்துகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சீஷர்கள் பிரசங்கித்த சத்தியத்தை நிராகரித்தவர்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. வல்லமை, பேராசை மற்றும் பிசாசின் பல தீமைகள் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் சாட்சியமாக உள்ளன.

திறவுகோல் வசனங்கள்: அப்போஸ்தலர் 1:8: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”

அப்போஸ்தலர் 2:4: “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.”

அப்போஸ்தலர் 4:12: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”

அப்போஸ்தலர் 4:19-20: “பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.”

அப்போஸ்தலர் 9:3-6: “அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.”

அப்போஸ்தலர் 16:31: “அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னார்கள்.”

சுருக்கமான திரட்டு: அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றையும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் பரவலையும், அதற்கு பெருகிய எதிர்ப்பையும் தொகுத்து தருகிறது. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் பல உண்மையுள்ள ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பவுல் என்று பெயர் மாற்றப்பட்ட சவுல் மிகவும் செல்வாக்கு பெற்றவர் ஆவார். அவர் மனமாற்றப்படுவதற்கு முன்பு, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதிலும் கொலை செய்வதிலும் பவுல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தமஸ்கு சாலையில் பவுலின் வியத்தகு மாற்றம் (அப்போஸ்தலர் 9:1-31) அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் சிறப்பம்சமாகும். அவர் மாற்றப்பட்ட பிறகு, தேவனை நேசிப்பதற்கும், அவருடைய வார்த்தையை வல்லமை, உற்சாகம் மற்றும் உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் பிரசங்கிப்பதற்கும் நேர்மாறான நிலைக்குச் சென்றார். எருசலேமில் (1–8:3 அதிகாரங்கள்), யூதேயா மற்றும் சமாரியாவிலும் (அதிகாரங்கள் 8:4–12:25), பூமியின் எல்லா முனைகளிலும் (அதிகாரங்கள் 13:1–28) பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுக்கு அதிகாரம் அளித்தார். கடைசி பகுதியில் பவுலின் மூன்று மிஷனரி பயணங்கள் (13:1–21:16), எருசலேம் மற்றும் சிசரியாவில் அவர் சந்தித்த சோதனைகள் (21:17–26: 32) மற்றும் ரோமாபுரிக்கு அவர் மேற்கொண்ட இறுதி பயணம் (27:1–28:31)ஆகிய விவரணங்களை இந்த அப்புத்தகம் அளிக்கிறது.

இணைப்புகள்: நியாயப்பிரமான சட்டங்களின் பழைய உடன்படிக்கையிலிருந்து இரக்கம் மற்றும் விசுவாசத்தின் புதிய உடன்படிக்கைக்கு மாறுவதற்கு அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் மிகவும் உதவுகிறது. இந்த மாற்றம் நியாயப்பிரமான சட்டங்களில் பல முக்கிய நிகழ்வுகளில் காணப்படுகிறது. முதலாவதாக, பரிசுத்த ஆவியின் ஊழியத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பழைய ஏற்பாட்டில் முதன்மையான செயல்பாடு தேவனுடைய மக்களின் வெளிப்புற “அபிஷேகம்” ஆகும், அவர்களில் மோசே (எண்கள் 11:17), ஒத்தனியேல் (நியாயாதிபதிகள் 3:8-10) , கிதியோன் (நியாயாதிபதிகள் 6:34), சவுல் (1 சாமுவேல் 10:6-10) அடங்குவர். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஆவியானவர் விசுவாசிகளின் இருதயங்களில் தங்கி வாசம் செய்யும்படி வந்தார் (ரோமர் 8:9-11; 1 கொரிந்தியர் 3:16), அவர்களை உள்ளே இருந்து வழிநடத்தி அதிகாரம் அளித்தார். இது விசுவாசத்தில் தம்மிடம் வருபவர்களுக்கு தேவன் அளிக்கும் அவருடைய ஈவாகும்.

பழைய உடன்படிக்கையிலிருந்து புதியதாக மாறுவதற்கு பவுலின் மனமாற்றம் ஒரு வியத்தகு எடுத்துக்காட்டு. உயிர்த்தெழுந்த இரட்சகரைச் சந்திப்பதற்கு முன்பு, அவர் இஸ்ரவேலர்களில் மிகவும் வைராக்கியமுள்ளவர் என்றும், “நியாயப்பிரமாணத்தின் நீதியைப்” பொறுத்தமட்டில் (பிலிப்பியர் 3:6) குற்றமற்றவர் என்றும் பவுல் ஒப்புக்கொண்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும் முன்னர் கிறிஸ்தவர்களை துன்புறுத்த வைராக்கியம் கொண்டு கொதித்தெழுந்தார். ஆனால் அவர் மாற்றப்பட்ட பின்னர், அவருடைய சட்டபூர்வமான முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்பதை அவர் உணர்ந்தார், அவர் அவைகளை வெறும் “குப்பைகளாக” கருதினார், “நான் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்” (பிலிப்பியர் 3: 8-9). இப்போது நாமும் விசுவாசத்தினாலே வாழ்கிறோம், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, எனவே மேன்மை பாராட்ட நமது சொந்த முயற்சிகள் எதுவும் இல்லை (எபேசியர் 2:8-9).

அப்போஸ்தலர் 10:9-15-ல் உள்ள புசிக்கும் உணவுகளைக் குறித்த துப்பட்டியைப் பற்றிய பேதுருவின் பார்வை பழைய உடன்படிக்கையிலிருந்து மாறுவதற்கான மற்றொரு அறிகுறியாகும் இந்த விஷயத்தில் யூதர்களுக்கு குறிப்பாக உணவுச் சட்டங்கள் இருந்தன - புதிய உடன்படிக்கையின் யூத மற்றும் புறஜாதியாரின் ஒற்றுமைக்கு ஒரு உலகளாவிய திருச்சபையில் இப்படியானது. யூதர்களைக் குறிக்கும் "பரிசுத்தமான" விலங்குகள் மற்றும் புறஜாதியாரைக் குறிக்கும் "அசுத்தமான" விலங்குகள் இரண்டும் கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் மரணத்தின் மூலம் தேவனால் "சுத்திகரிக்கப்பட்டவை" என்று அறிவிக்கப்பட்டன. பழைய நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் இனி இராமல், இருகூட்டத்தார்களும் இப்போது கிறிஸ்துவின் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தினால் விசுவாசம் மூலம் கிருபையின் புதிய உடன்படிக்கையில் ஒன்றுபட்டுள்ளனர்.

நடைமுறை பயன்பாடு: தேவன் தம்முடைய ஆவியின் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்போது சாதாரண மனிதர்கள் மூலமாக அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். தேவன் அடிப்படையில் ஒரு மீனவர் குழுவை எடுத்து உலகை தலைகீழாக மாற்ற பயன்படுத்தினார் (அப்போஸ்தலர் 17:6). தேவன் கிறிஸ்தவர்களை வெறுக்கும் கொலைபாதகனை அழைத்து, புதிய ஏற்பாட்டின் கிட்டத்தட்ட பாதி புத்தகங்களை எழுதிய மிகப் பெரிய கிறிஸ்தவ சுவிசேஷகராக அவரை மாற்றினார். உலக வரலாற்றில் ஒரு "புதிய நம்பிக்கையின்" விரைவான விரிவாக்கத்தை ஏற்படுத்த தேவன் உபவத்திரவத்தைப் பயன்படுத்தினார். நம்முடைய இருதயங்களை மாற்றுவது, பரிசுத்த ஆவியினால் நமக்கு அதிகாரம் அளிப்பது, கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் நற்செய்தியை பரப்புவதற்கான ஆர்வத்தை நமக்குக் கொடுப்பதன் மூலம் தேவன் நம் மூலமாகவும் அதைச் செய்ய முடியும். இவற்றை நம் நமது சொந்த சக்தியால்/பெலத்தால் நிறைவேற்ற முயன்றால், நாம் தோல்வியடைவோம். அப்போஸ்தலர் 1:8-ல் உள்ள சீஷர்களைப் போலவே, ஆவியின் அதிகாரம் மற்றும் வல்லமை பெறுவதற்காக நாம் காத்திருக்க வேண்டும், பின்னர் நமதாண்டவர் நமக்கு அருளிய பெரிய ஆணையத்தை நிறைவேற்ற அவருடைய வல்லமையுடன் செல்லுவோம் (மத்தேயு 28:19-20).

English



முகப்பு பக்கம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries