1 நாளாகமம் புத்தகம்


கேள்வி: 1 நாளாகமம் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: 1 நாளாகமம் புத்தகம் அதன் எழுத்தாளர் யார் என்பதைக்குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை. பாரம்பரியமாக தொன்றுதொட்டு நம்பப்பட்டு வருவது என்னவென்றால், 1 மற்றும் 2 நாளாகமம் புத்தகங்கள் எஸ்றாவால் எழுதப்பட்டது என்பதாகும்.

எழுதப்பட்ட காலம்: 1 நாளாகமம் புத்தகம் கி.மு. 450 முதல் கி.மு. 425 வரையிலுள்ள காலத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: 1 & 2 நாளாகமம் புத்தகங்கள் பெரும்பாலும் 1 & 2 சாமுவேல் மற்றும் 1 & 2 ராஜாக்கள் புத்தகங்களைப் போன்ற தகவல்களை உள்ளடக்கியது. 1 & 2 நாளாகமப் புத்தகங்கள் அந்தக் காலத்தின் ஆசாரிய அம்சத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்துகிறது. 1 நாளாகமம் புத்தகம் சிறைபட்டு நாடுகடத்தப்பட்ட பின்னர் இஸ்ரவேலுக்குத் திரும்புபவர்களுக்கு தேவனை எவ்வாறு நமஸ்கரித்து சேவிப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. தெற்கு ராஜ்யமாகிய யூதாவின் வரலாறு, யூதா, பெஞ்சமின் மற்றும் லேவி கோத்திரங்களைக் மையமாகக் கொண்டது. இந்த கோத்திரங்கள் தேவனுக்கு அதிக விசுவாசமுள்ளவர்களாக இருந்தனர்.

திறவுகோல் வசனங்கள்: 1 நாளாகமம் 11:1-2, “இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.”

1 நாளாகமம் 21:13, “அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.”

1 நாளாகமம் 29:11, “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.”

சுருக்கமான திரட்டு: 1 நாளாகமத்தின் முதல் 9 அதிகாரங்கள், பட்டியல்கள் மற்றும் வம்சவரலாறுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 நாளாகமம் புத்தகம் முழுவதும் பல பட்டியல்களும் வம்சவரலாறுகளும் சிதறிக்கிடக்கின்றன. இடையில், 1 நாளாகமம் புத்தகம் தாவீது சிங்காசனத்திற்கு ஏறியதையும் அதன் பின்னர் அவர் செய்த செயல்களையும் பதிவு செய்கிறது. தாவீதின் குமாரன் சாலமோன் இஸ்ரவேலின் ராஜாவாகியதோடு புத்தகம் முடிகிறது. சுருக்கமாக கோடிட்டுக் காட்டப்பட வேண்டுமானால், 1 நாளாகமம் புத்தகம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: அதிகாரங்கள் 1:1-9:23 - தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறு; அதிகாரங்கள் 9:24-12:40 - தாவீதின் உயர்வு; அதிகாரங்கள் 13: 1-20: 30 – தாவீதின் ராஜ்யபாரம்.

முன்னிழல்கள்: 1 நாளாகமம் 16:33-ல் தாவீது தேவனுக்கு நன்றி செலுத்தும் துதியில், தேவன் “பூமியை நியாயந்தீர்க்க” வரும் நேரத்தை அவர் குறிப்பிடுகிறார். இது மத்தேயு 25-ஐ முன்னறிவிக்கிறது, அதில் இயேசு இந்த பூமிக்கு நியாயந்தீர்க்க வரும் நேரத்தை விவரிக்கிறார். பத்து கன்னிகைகள் மற்றும் தாலந்துகளின் உவமைகள் மூலம், கிறிஸ்துவின் இரத்தம் இல்லாமல் தங்கள் பாவங்களை மூடிமறைப்பவர்கள் "காரிருளில்" தள்ளப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கிறார். அவர் தம் ஜனங்களை ஆயத்தமாக இருக்கும்படி ஊக்குவிக்கிறார், ஏனென்றால் அவர் வரும்போது, செம்மறி ஆடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பார்.

17-ஆம் அதிகாரத்தில் தேவன் மீண்டும் வலியுறுத்துகின்ற தாவீதின் உடன்படிக்கையின் ஒரு பகுதி, தாவீதின் சந்ததியினராக இருக்கும் வருங்கால மேசியாவைக் குறிக்கிறது. 13-14 வசனங்கள் தேவனுடைய வீட்டை ஸ்தாபிக்கும் குமாரனை விவரிக்கின்றன, அதன் சிங்காசனம் என்றென்றும் நிலைநாட்டப்படும். இது இயேசு கிறிஸ்துவை மட்டுமே குறிக்க முடியும்.

நடைமுறை பயன்பாடு: 1 நாளாகமம் போன்ற வம்சாவளிகள் நமக்கு வறண்டதாகத் தோன்றலாம், ஆனால் இது தேவன் தம்முடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது, நம் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கை வரை கூட அவர் அறிந்திருக்கிறார் (மத்தேயு 10:30). நாம் யார், நாம் என்ன செய்கிறோம் என்பது தேவனுடைய மனதில் என்றென்றும் எழுதப்பட்டிருப்பதால் நாம் ஆறுதல் பெறலாம். நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்றால், நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் என்றென்றும் எழுதப்பட்டுள்ளன (வெளிப்படுத்துதல் 13:8).

தேவன் தம் ஜனத்திற்கு உண்மையுள்ளவர், அவருடைய வாக்குறுதிகளைக் காக்கிறவராயிருக்கிறார். 1 நாளாகமம் புத்தகத்தில், தாவீது எல்லா இஸ்ரவேலருக்கும் ராஜாவாகியபோது தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் காண்கிறோம் (1 நாளாகமம் 11:1-3). அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கும், மனந்திரும்புதலுடன் கிறிஸ்துவிடம் வருபவர்களுக்கும், அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் அவர் ஆசீர்வாதம் அளித்துள்ளார்.

கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைத் தருகிறது; கீழ்ப்படியாமை நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது. 1 நாளாகமம், அத்துடன் 1 & 2 சாமுவேல் மற்றும் 1 & 2 ராஜாக்கள் ஆகிய புத்தகங்கள் பாவம், மனந்திரும்புதல், மன்னிப்பு மற்றும் இஸ்ரவேல் தேசத்தின் மறுசீரமைப்பு ஆகியவற்றின் ஒரு காலவரிசையாகும். அதேபோல், தேவன் நம்மிடம் பொறுமையாக இருக்கிறார், உண்மையான மனந்திரும்புதலோடு நாம் அவரிடம் வரும்போது நம்முடைய பாவத்தை அவர் மன்னிப்பார் (1 யோவான் 1:9). நம்முடைய துக்கசமயத்து ஜெபத்தை அவர் கேட்கிறார், நம்முடைய பாவத்தை மன்னிப்பார், அவருடனான கூட்டுறவுக்கு அல்லது ஐக்கியத்திற்கு நம்மை மீட்டெடுக்கிறார், மகிழ்ச்சியின் பாதையில் நம்மை கொண்டுச் சென்று அமைக்கிறார் என்பதில் நாம் ஆறுதல் பெறலாம்.

English


முகப்பு பக்கம்
1 நாளாகமம் புத்தகம்