settings icon
share icon
கேள்வி

கவலையைக் குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?

பதில்


கிறிஸ்தவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது. பிலிப்பியர் 4:6-ல், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கட்டளையிடப்பட்டுள்ளோம். இந்த வேதப்பகுதியில், நம்முடைய தேவைகள் மற்றும் கவலைகள் அனைத்தையும் குறித்துக் கவலைப்படுவதைக் காட்டிலும் அவைகளை ஜெபத்தில் தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். உடுப்பு, உணவு போன்ற நம்முடைய சரீர தேவைகளைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். நம்முடைய பரலோகப் பிதா நம்முடைய எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்வார் என்று இயேசு நமக்கு உறுதியளிக்கிறார் (மத்தேயு 6:25-34). எனவே, எதைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

கவலைப்படுவது ஒரு விசுவாசியின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்பதால், ஒருவர் கவலையை எவ்வாறு சமாளிப்பார்? 1 பேதுரு 5:7-ல், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்சினைகள் மற்றும் சுமைகளின் பாரத்தை நாம் சுமப்பதை தேவன் விரும்பவில்லை. இந்த வசனத்தில், நம்முடைய கவலைகள் மற்றும் பாரங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுக்கும்படி/கொண்டுவரும்படி தேவன் சொல்கிறார். தேவன் ஏன் நம் பிரச்சினைகளை எடுத்துக்கொள்ள விரும்புகிறார்? அவர் நம்மை கவனித்துக்கொள்வதால் தான் என்று வேதாகமம் சொல்கிறது. நமக்கு நடக்கும் எல்லாவற்றையுங் கிறித்து தேவன் கருதுகிறார்/கவலைப்படுகிறார். எந்த ஒரு கவலையும் அவருடைய கவனத்திற்கு மிகப் பெரியது அல்லது மிகச் சிறியது அல்ல. நம்முடைய பிரச்சினைகளை நாம் தேவனுக்கு அவரிடத்தில் கொடுக்கும்போது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் நமக்குத் தருவதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார் (பிலிப்பியர் 4:7).

மெய்யாகவே, இரட்சகரை அறியாதவர்களுக்கு, கவலை மற்றும் பதட்டம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். ஆனால், தம் வாழ்க்கையை அவருக்குக் கொடுத்தவர்களுக்கு, இயேசு பின்வருமாறு வாக்குறுதி அளித்தார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்” (மத்தேயு 11:28-30).

English



முகப்பு பக்கம்

கவலையைக் குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries