settings icon
share icon
கேள்வி

பயத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


இரண்டு குறிப்பிட்ட வகையிலுள்ள பயங்களைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுகிறது. முதல் வகை நன்மை பயக்கும் மற்றும் ஊக்குவிக்கப்பட வேண்டிய பயமாகும். இரண்டாவது வகை ஒரு தீங்கு மற்றும் அதை ஜெயிக்கப்பட வேண்டிய பயமாகும். முதல் வகை பயம் தேவனுக்குரிய பயம். இந்த வகை பயம் எதையாவது நாம் பயப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, இது தேவனுடைய பயபக்தியான பிரமிப்பு; அவருடைய வல்லமை மற்றும் மகிமைக்கான பயபக்தியாகும். இருப்பினும், இது அவருடைய வெஞ்சினத்திற்கும் கோபத்திற்கும் சரியான மரியாதை மற்றும் கனம் அளிப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனைப் பற்றிய பயம் என்பது தேவன் எப்படிப்பட்டவர் என்கிற வகையில் அவரது அனைத்தையும் முழுமையாக ஒப்புக்கொள்வதாகும், இது அவரையும் அவருடைய பண்புகளையும் அறிந்து கொள்வதன் மூலம் வருகிறது.

கர்த்தருக்குப் பயப்படுவது பல ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தருகிறது. இது ஞானத்தின் ஆரம்பம் மற்றும் நல்ல புரிதலுக்கு வழிவகுக்கிறது (சங்கீதம் 111:10). மூடர்கள் மட்டுமே ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள் (நீதிமொழிகள் 1:7). மேலும், கர்த்தருக்குப் பயப்படுவது ஜீவன், இளைப்பாறுதல், அமைதி மற்றும் மனநிறைவுக்கு வழிவகுக்கிறது (நீதிமொழிகள் 19:23). இது ஜீவ நீரூற்று (நீதிமொழிகள் 14:27) மற்றும் நமக்கு ஒரு பாதுகாப்பையும் பாதுகாப்பான இடத்தையும் வழங்குகிறது (நீதிமொழிகள் 14:26).

ஆக, தேவனுக்கு பயப்படுவது எவ்வாறு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை ஒருவர் காணலாம். இருப்பினும், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது வகை பயம் பயனளிக்காது. 2 தீமோத்தேயு 1:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்”. பயம் மற்றும் பயத்தின் ஆவி தேவனிடமிருந்து வரவில்லை.

இருப்பினும், சில நேரங்களில் நாம் பயப்படுகிறோம், சில சமயங்களில் இந்த “பயத்தின் ஆவி” நம்மை மேற்கொள்கிறது, அதை மேற்கொள்ள் நாம் தேவனை முழுமையாக நம்பி அவரை நேசிக்க வேண்டும். “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18). யாரும் பரிபூரணர் அல்ல, தேவன் இதை அறிவார். அதனால்தான் அவர் பயத்திற்கு எதிராகவுள்ள தேறுதலையும் ஊக்கத்தையும் வேதாகமம் முழுவதும் தாராளமாக வைத்திருக்கிருக்கிறார். ஆதியாகமம் புத்தகத்தில் தொடங்கி வெளிப்படுத்துதல் புத்தகம் முழுவதும், "பயப்படாதே" என்று தேவன் நமக்கு நினைவூட்டுகிற காரியம் தொடர்கிறது.

உதாரணமாக, ஏசாயா 41:10 நம்மை ஊக்குவிக்கிறது, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்”. பெரும்பாலும் நாம் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறோம், நம்மில் அல்லது நமக்கு என்ன ஆகப்போகிறது எனப் பயப்படுகிறோம். ஆனால் தேவன் ஆகாயத்துப் பறவைகளை கவனித்துக்கொள்கிறார் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார், ஆகவே அவர் தம் பிள்ளைகளுக்கு இன்னும் எவ்வளவு கொடுப்பார்? “ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 10:31). இந்த சில வசனங்கள் பல வகையான பயங்களை உள்ளடக்கியது. தனியாக இருப்பதற்கும், மிகவும் பலவீனமாக இருப்பதற்கும், கேட்கப்படாததற்கும், சரீரத் தேவைகள் இல்லாததற்கும் பயப்பட வேண்டாம் என்று தேவன் சொல்கிறார். இந்த அறிவுரைகள் வேதாகமம் முழுவதும் தொடர்கின்றன, இது "பயத்தின் ஆவியின்" பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

சங்கீதம் 56:11-ல் சங்கீதக்காரன் எழுதுகிறார், “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” இது தேவனை நம்பும் வல்லமைக்கு ஒரு அற்புதமான சான்று ஆகும். என்ன நடந்தாலும், சங்கீதக்காரன் தேவனையே நம்புவார், ஏனென்றால் அவர் தேவனுடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார், புரிந்தும்கொள்கிறார். அப்படியானால், பயத்தை வெல்வதற்கான திறவுகோல், தேவன்மீது முழுமையான மற்றும் பரிபூரணமான நம்பிக்கை கொள்வதாகும். தேவனை நம்புவது பயத்தைத் தர மறுப்பதாகும். இது இருண்ட காலங்களில் கூட தேவனிடம் திரும்புவதும், விஷயங்களைச் சரியாகச் செய்வதாக அவரை நம்புவதும் ஆகும். இந்த நம்பிக்கை தேவனை அறிவதிலிருந்தும், அவர் நல்லவர் என்பதை அறிவதிலிருந்தும் வருகிறது. வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மிகக் கடினமான சில சோதனைகளை அனுபவிக்கும் போது யோபு சொன்னது போல், “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்பதாகும்.

தேவன் மீது நம்பிக்கை வைக்க நாம் கற்றுக்கொண்டவுடன், நமக்கு எதிராக வரும் விஷயங்களுக்கு இனி பயப்பட மாட்டோம். நம்பிக்கையுடன் சொன்ன சங்கீதக்காரனைப் போல நாமும் இருப்போம் “… உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக” (சங்கீதம் 5:11).

Englishமுகப்பு பக்கம்

பயத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries