settings icon
share icon
கேள்வி

அந்நிய பாஷைகளில் பேசும் வரம் என்றால் என்ன?

பதில்


முதன்முதலில் அந்நிய பாஷைகளில் பேசும் சம்பவம் அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-4ல் குறிப்பிட்டுள்ளபடி பெந்தெகோஸ்தே நாளில்தான் பேசினதாக பார்க்கிறோம். அப்போஸ்தலர்கள் திரளான மக்களுடன் அவர்களுடைய மொழிகளிலேயே சுவிசேஷத்தை பகிர்ந்து கொண்டார்கள்: “நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்” (அப் 2:11). அந்நியபாஷை என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க சொல்லின் நேரடியான பொருள் “மொழிகள்” என்பதாகும். எனவே, அந்நிய பாஷைகளில் பேசும் வரம் என்பது ஒருவர் தான் அறிந்திராத ஒரு மொழியில் பேசி அந்த மொழியை அறிந்த ஒருவருக்கு ஊழியம் செய்யக் கொடுக்கப்படுவதாகும். 1 கொரிந்தியர் 12 முதல் 14 வரையிலுள்ள அதிகாரங்களில் பவுல் அற்புத வரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிக் குறிப்பிடுகிறார், “மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?” (1 கொரிந்தியர் 14:6). அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறபடி, அந்நிய பாஷைகளில் பேசும் வரம் என்பது தேவனுடைய செய்தியை தங்களுடைய மொழியிலேயே கேட்கும் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது, எனினும், மொழிபெயர்க்கப்பட வில்லையென்றால் அல்லது அர்த்தம் சொல்லப்படவில்லை என்றால் மற்ற அனைவருக்கும் அது பயனில்லாமல் போய்விடும்.

பாஷைகளை வியாக்கியானம் பண்ணும் வரமுடைய ஒருவரால் அந்நிய பாஷையில் ஒருவர் பேசும்போது அந்த மொழி அவருக்கு தெரியாது என்றாலும் அதைப் புரிந்துகொள்ள முடியும். பாஷைகளை வியாக்கியானம் பண்ணுபவர் அனைவரும் புரிந்துகொள்வதற்கென அந்நிய பாஷையில் ஒருவர் பேசும்போது அதன் பொருளைச் சொல்லுவார். “அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்” (1 கொரிந்தியர் 14:13). வியாக்கியானம் சொல்லப்படாமல் அந்நிய பாஷையில் பேசுவதைக் குறித்துப் பவுல் சொல்வது மிகவும் ஆழமானது: “அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்” (1 கொரிந்தியர் 14:19).

அந்நிய பாஷைகளில் பேசும் வரம் இக்காலத்திற்குத் தேவையா? 1 கொரிந்தியர் 13:8ல் “அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோகும்” என்றே குறிப்பிடுகிறது. 1 கொரிந்தியர் 13:10ல் “நிறைவானது” வரும்பொழுது குறைவானது ஒழிந்துபோகும் என்று கூறப்பட்டிருக்கிறது. சிலர் தீர்க்கதரிசனம் சொல்லுதல் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பற்றி “ஒழிந்துபோகும்” என்றும் அந்நிய பாஷைகளைப் பற்றி “ஓய்ந்துபோகும்” எனவும் குறிப்பிடும் வினைகளுக்குகிடையே காலம் பற்றி உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி அதை நிறைவானது வரும் முன்னேயே அந்நிய பாஷைகள் ஒழிந்துபோவதற்கான ஆதாரம் என்கின்றனர். இப்படி இருக்கலாம் என்றாலும், அது எழுதப்பட்டிருப்பதில் வெளிப்படையாகத் தெரிவதில்லை. சிலர் ஏசாயா 28:11 மற்றும் யோவேல் 2:28-29: ஆகிய பகுதிகளை ஆதாரமாகக் காட்டி, அந்நிய பாஷையில் பேசுதல் வருகிற கர்த்தருடைய கோபாக்கினைக்கு அடையாளம் என்கின்றனர். 1 கொரிந்தியர் 14:22 அந்நிய பாஷைகளை “அவிசுவாசிகளுக்கு அடையாளாமாக” இருப்பதாக கூறுகிறது. இந்த வாதத்தின்படி, அந்நிய பாஷைகளில் பேசும் வரம் என்பது இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாததற்காக இஸ்ரவேலை கர்த்தர் நியாயந்தீர்க்கப் போகிறார் என்று யூத மக்களை எச்சரிப்பதற்காகும். எனவே, கி.பி. 70ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டு கர்த்தர் இஸ்ரவேலை நியாயந்தீர்த்தபோது அந்நிய பாஷை வரத்தின் நோக்கம் நிறைவேறியதால் அதற்கு பின் வேறு பயனில்லை. இப்படிப்பட்ட கண்ணோட்டம் இருக்கலாம் என்றாலும், அந்நியபாஷை வரத்தின் முதன்மை நோக்கம் நிறைவேறியவுடனே அது முற்றிலும் ஒழிந்துபோக வேண்டும் என்றும் இல்லை. அந்நிய பாஷை வரம் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக வேதாகமம் முடிவாகச் சொல்லவில்லை.

அதேவேளையில், அந்நியபாஷையில் பேசும் வரம் இன்றும் சபையில் இருக்குமேயென்றால், அது வேதாகமத்தின் படி நடக்கிறதாக இருக்கவேண்டும். அது உண்மையான புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக இருக்கவேண்டும் (1 கொரிந்தியர் 14:10). அது தேவனுடைய வார்த்தையை வேறுமொழி பேசுகிற ஒருவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்திற்காக இருக்கவேண்டும் (அப்போஸ்தலர் நடபடிகள் 2:6-12). “யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்” என்று தேவன் அப்போஸ்தலனாகிய பவுல் மூலம் கொடுத்த கட்டளைக்கு ஒத்ததாக இருக்கும். மேலும் 1 கொரிந்தியர் 14:33ல் “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது” என்று கூறப்பட்டபட்டதற்கு ஒத்ததாகவும் இருக்கவேண்டும்.

வேற்றுமொழி பேசும் ஒருவருடன் பேசி உரையாடுவதற்கு ஆற்றலுள்ளவராக்க நிச்சயமாக தேவனால் ஒருவரை அந்நிய பாஷை வரத்தினால் நிரப்பமுடியும். ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்து அளிப்பதில் பூரண அதிகாரம் பரிசுத்த ஆவியானவருக்கு உண்டு (1 கொரிந்தியர் 12:11). மிஷனரிகளுக்கு மொழி கற்பதற்கான பள்ளிகளுக்குச் செல்லாமலேயே மக்களிடம் அவர்களுடைய சொந்த மொழிகளிலேயே பேச முடிந்திருக்குமானால் எவ்வளவு அதிகமாக இன்னும் சுவிசேஷத்தை அறிவித்திருக்க முடியும். ஆனாலும், கர்த்தர் இப்படிச் செய்யவில்லை. மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்குமென்றாலும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நடந்தைப்போல இன்றைக்கு அந்நியபாஷை வரம் செயல்படுவதில்லை. அந்நிய பாஷை வரம் பெற்று பேசுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான விசுவாசிகள் மேலே குறிப்பிட்ட வேதாகமப் பகுதிகளை ஆமோதிப்பதில்லை. அந்நிய பாஷை வரம் ஓய்ந்துபோனது அல்லது குறைவானது, இன்றைக்கு சபையைப் பற்றிய கர்த்தருடைய சித்தத்தில் இது மிகவும் அபூர்வம் என்ற முடிவுக்கு நாம் வர இந்த உண்மைகள் உதவுகின்றன.

English



முகப்பு பக்கம்

அந்நிய பாஷைகளில் பேசும் வரம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries